வவுனியாவில் 98பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பு!!!

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்ததையடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளிற்காக வவுனியாவில் பல்வேறுபட்ட நபர்களிடம் பிசிஆர் பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ்பல்கலைக்கழக வவுனியாவளாகத்தில் கல்வி பயின்றுவரும் கம்பஹா மற்றும் அதனை அண்டிய பகுதிகளை சேர்ந்த 90 பேருக்கு இன்றையதினம் காலை வவுனியா பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனையால் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் வவுனியா தோணிக்கல் ஆலடிப்பகுதியில் வசிக்கும் உறவினர்களை மினுவாங்கொடையில் இருந்து வருகைதந்து சந்தித்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அக்குடும்பம் வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, 3 சிறுபிள்ளைகள் என 5பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த பெண் தொடர்புகளை பேணியதாக தெரிவித்து வவுனியா நகர்பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் பணிபுரியும் இரு பெண்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகளிற்கு உட்படுத்தப்பட்டனர்.

எனினும் கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட தமது சகோதரி கடந்தமாதம் 10 ஆம் திகதியே தமது வீட்டிற்கு இறுதியாக வந்ததாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதேவேளை சேகரிக்கப்பட்ட மாதிரிகள் யாழ் போதனா வைத்தியசாலையின் ஆய்வு கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

— நாட்டில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் வவுனியா பொலிசார் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு விசேட அறிவித்தலை இன்று(06.10) வழங்கி வருகின்றார்கள்.

கம்பகா ஆடைத் தொழில்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணிய நிலையில் வவுனியாவிலும் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக பேணுமாறு வவுனியா பொலிசார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.

அத்துடன், சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளானோருடன் தனிமைப்படுத்தல் காலத்திர் நேரடி தொடர்புளை பேண வேண்டாம் எனவும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளையும், சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றுமாறு அறிவுறுத்துவதுடன் மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்