கொரோணா வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பம்!!!

கொரோணா வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் சுகாதார வழி முறைகளைப் பின்பற்றி பாதுகாப்புடன் நாடளாவிய ரீதியில் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்குடா, மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு, பட்டிப்பளை, மண்முனை மேற்கு ஆகிய கல்வி வலயங்களிலும் உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டது.

அந்தவகையில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் முகக்கவசம் அணிந்து பரீட்சை நிலையத்திற்கு தந்திருந்ததுடன், வருகை தந்த மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கைகளைக் கழுவி பரீட்சை நிலையத்திற்கு செல்வதை காண முடிந்தது.

மேலும் பரீட்சை நிலையங்களுக்கு சுகாதாரப் பிரிவினர் மற்றும் பொலிஸார் வருகை தந்து பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வழங்கியதுடன், சகல பரீட்சை நிலையங்களிலும் சுகாதாரப் பிரிவினர் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கமைவாக மாணவர்கள் முகக்கவசம் அணிந்து பரீட்சையில் கலந்து கொண்டுள்ளனர்.

உயர்தர பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இம்முறை 3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 பரீட்சாத்திகள் உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களில் 3 இலட்சத்து 19 ஆயிரத்து 485 பேர் புதிய பாடத்திட்டத்திலும், 43 ஆயிரத்து 339 பேர் பழைய பாட திட்டத்திலும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். புதிய பாடத்திட்டத்தில் 2 இலட்சத்து 77 ஆயிரத்து 580 பேர் பாடசாலை மூல பரீட்சாத்திகளாவர். எஞ்சிய 41 ஆயிரத்து 905 பேர் தனியார் பரீட்சாத்திகளாவர்.

உயர்தர பரீட்சைகளுக்காக நாடளாவிய ரீதியில் 2648 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு 316 ஒருங்கிணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ந.குகதர்சன் – 0778730529

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்