இஸ்லாமிய அடிப்படை வாதம் தொடர்பில் எச்சரித்தபோது ரணிலே அதை எதிர்த்தார் – ஆணைக்குழு முன் போட்டுடைத்தார் மைத்திரி!!!

“தற்போதைய தேசிய உளவுச் சேவையின் பிரதனியும் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளருமான பிரிகேடியர் சுரேஷ் சலே, 2015ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் தேசிய பாதுகாப்புப் பேரவையில் விடயங்களை முன்வைத்தபோது, அதற்கு அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

முஸ்லிம்களிடையே அமைதியின்மை ஏற்படலாம் எனத் தெரிவித்து அதனை அவர் எதிர்த்தார் எனவும், அதன்பின்னர் பிரிகேடியர் சுரேஷ் சலேவை இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் பதவியில் இருந்து மாற்ற பிரதமர் ரணிலும் மற்றொரு அமைச்சரும் அழுத்தம் கொடுத்திருந்தனர்” எனவும் அவர் நேற்று சாட்சியமளித்தார்.

எவ்வாறாயினும் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஊடாக சுரேஷ் சலேவைக் கைதுசெய்ய திட்டமிடப்பட்ட நிலையில், தானும் அப்போதைய இராணுவத் தளபதியும் இணைந்து கலந்துரையாடி, அவரை மலேசியத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியாக இடமாற்றம் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் நேற்று இரண்டாவது நாளாக சுமார் 6 மணி நேர சாட்சியம் வழங்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தேசிய பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் ஒருமுறை நிகாப்பை தடை செய்யப் பேச்சுக்கள் இடம்பெற்றபோது, அங்கு பேசப்பட்ட விடயங்களை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வெளிப்படுத்தினார்.

ரணில் விக்கிரமசிங்க தேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்த அக்கறையும் கொண்டிருக்கவில்லை. அதனால் அவரை தேசிய பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்துக்கு அழைப்பதை நிறுத்தினோம்.

நிறைவேற்று ஜனாதிபதி எனும் ரீதியில் நான் வழங்கும் எந்த ஆலோசனைகளையும் பின்பற்றக்கூடாது என அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களுக்கு அறிவித்திருந்தார்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.