உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் அரசு மீதான மக்களின் நம்பிக்கைக்குப் பாதிப்பு ஏற்படாது – ’20’ஐ திருத்தியமைப்போம் என்கின்றது ராஜபக்ச அரசு!!!

“அரசு மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவு நாடாளுமன்றக் குழு விவாதத்தைத் தொடர்ந்து திருத்தம் செய்யப்படும். உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை முழுமையாகச் செயற்படுத்துவோம்.”

– இவ்வாறு ராஜபக்ச அமைச்சரவையிலுள்ள துறைமுக அபிவிருத்தி மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-


“அரசியமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவு தொடர்பில் எதிர்க்கட்சியினர் ஆரம்பத்தில் இருந்து சமூக மட்டத்தில் தவறான நிலைப்பாட்டைத் தோற்றுவித்து வருகின்றார்கள்.
19 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இவ்வாறான விமர்சனங்கள் எழுவதற்குக்கூட அப்போதைய அரசு காலவகாசம் வழங்கவில்லை. திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு இறுதியில் யார் பொறுப்பு என்பதுகூடக் கேள்விக்குறியாக்கப்பட்டது.

19 ஆவது திருத்தச் சட்டம் குறுகிய அரசியல் நோக்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதால் அரச நிர்வாகம் பலவீனமடைந்தது. நாட்டு மக்கள் இந்தத் திருத்தச் சட்டத்தை வெறுத்ததன் காரணமாகவே கடந்த அரசை முழுமையாகப் புறக்கணித்தார்கள்.

19 வது திருத்தத்தின் குறைபாடுகளுக்கும், அரச நிர்வாகத்தைப் பலப்படுத்தும் ஒரு தீர்வாகவே அரசமைப்பின் 20 ஆவது திருத்தம் ஒரு தற்காலிக ஏற்பாடாக உருவாக்கப்பட்டுள்ளது. புதிய அரசமைப்பை உருவாக்குவதே அரசின் பிரதான இலக்காகும்.

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவு தொடர்பில் உயர்நீதிமன்றின் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும் அதனைச் செயற்படுத்துவோம். வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் குழு நிலை விவாதத்தைத் தொடர்ந்து திருத்தம் செய்யப்படும் என்பதில் உறுதியாக உள்ளோம்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.