16 வயதுக்கும் குறைந்த பாடசாலை மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு.

எப்.முபாரக்  2020-10-13
16 வயதுக்கும் குறைந்த பாடசாலை மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இத்தீர்ப்பினை நேற்று திங்கட்கிழமை(12)  வழங்கியுள்ளார்.
இவ்வாறு 7 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளவர் திருகோணமலை மொரவெவ,குணவர்தனபுர பகுதியைச் சேர்ந்த சானக்க என்றழைக்கப்படும் கிறிஸ்தோம்பூ பதுகே சுரங்க சில்வா (30வயது) எனவும் தெரியவருகின்றது.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 10 ஆம் திகதி வரை உள்ள கால பகுதியில் மொரவெவ சிங்கள மகா வித்தியாலயத்திற்கு கல்வியைக் கற்பதற்காக சென்ற மாணவியிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டதாக அம்மாணவியின் வகுப்பாசிரியையினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மூன்றாம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த எதிரிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் குறித்த நபருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் இரண்டு குற்றச்சாட்டுக்களிலும் இவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு  திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தனது தீர்ப்பினை திறந்த நீதிமன்றில் வாசித்துக் காட்டியுள்ளார்.
இதேவேளை  பாரதூரமான பாலியல் குற்றச்சாட்டை புரிந்த குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு செலுத்துமாறும், குறித்த பணத்தை செலுத்த தவறினால் ஒரு வருட கால கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை  அரசுக்கு 25,000 ரூபாய் தண்டம் செலுத்துமாறும் அந்த பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் ஆறு மாத காலம் கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
0719300966

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.