தொடரும் ஊடக அடக்குமுறைக்கு கண்டனம் – ப.கார்த்தீபன்

முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் சட்ட விரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள்  சண்முகம் தவசீலன் மற்றும் கணபதிப்பிள்ளை குமணன்  உள்ளிட்ட இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையினை சிறீ ரெலோ கட்சியின் இளைஞரணித் தலைவர் பரமேஸ்வரன் கார்த்தீபன் அவர்கள் வன்மையாக கண்டிக்கிறேன் என அவரது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்
மேலும் அவரது ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது,
‘இலங்கையில் புதிய அரசு உருவாகி 6 மாதங்களுக்கு  மேல் கடந்துள்ள நிலையில், ஊடகவியலாளர்கள் மீதான அழுத்தமும்  தாக்குதல்களும் தொடர்ந்தவண்ணமே உள்ளன.
வடக்கு, கிழக்கிலுள்ள சிறுபான்மையின  ஊடகவியலாளர்கள் இன்றும் பாதுகாப்புத் தரப்பினரால் கண்காணிக்கப்படுவதுடன், அவர்களுக்காகப் பணியாற்றவும்  நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அதிகார வர்க்கத்தின் அநீதியைக்  வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதுடன், இனந்தெரியாத நபர்களின் மூலமும் அச்சுறுத்தப்படுகின்றனர்.
மேலும், பெரும்பான்மையின ஊடகவியலாளர்களின் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைக்கு எடுத்துள்ள நல்லாட்சி அரசாங்கமானது, இதுவரையில் சிறுபான்மையின ஊடகவியலாளர்களின்; படுகொலைச் சம்பவங்கள் தொடர்பான  விசாரணையை ஆரம்பிக்கவில்லை.
இலங்கையில் இதுவரையில் 43 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 35 தமிழ் ஊடகவியலாளர்களும் 05 பெரும்பான்மையின ஊடகவியலாளர்களும் 03 முஸ்லிம் ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர்.
1985ஆம் ஆண்டு தொடங்கிய தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் 2010ஆம் ஆண்டுவரை தொடர்ந்தவண்ணமே இருந்தது.  அரசாங்கமானது இதுவரையில் சிறுபான்மையின ஊடகவியலாளர்களின் படுகொலை  தொடர்பான விசாரணையில் அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை.
எனவே, படுகொலை செய்யப்பட்ட  தமிழ் ஊடகவியலாளர்கள் உட்பட அனைத்து ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பான விசாரணை உடனடியாக  ஆரம்பிக்க வேண்டும். அத்துடன், இலங்கையில் இன்றுவரை சுட்டுக்கொல்லப்பட்ட, காணாமல் போன சிறுபான்மையின ஊடகவியலாளர்களின் பெயர் விவரங்களை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியிட வேண்டும்.
தொடரும் மறைமுகமான ஊடக அடக்குமுறையை தடுத்து நிறுத்தி ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும்’ என  சிறீ ரெலோ கட்சியின் இளைஞரணித் தலைவர் பரமேஸ்வரன் கார்த்தீபன் அவர்கள் அவரது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.