20’ஐ எதிர்க்கும் மதத் தலைவர்கள் புதிய அரசமைப்புக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் – கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வலியுறுத்து!!

“இலங்கையில் மீண்டும் சர்வாதிகாரத்துக்கு வழி செய்யும் அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள பௌத்த பீடங்களும், கத்தோலிக்க ஆயர் பேரவையும் நாட்டில் புதிய அரசமைப்பு ஒன்று உருவாக்கப்படுவதற்கும் பாடுபட வேண்டும்.”

– இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

அரசமைப்பின் 20ஆவது திருத்த முயற்சிகளைத் தோற்கடிக்குமாறு பெளத்தத்தின் நான்கு பிரதான மத பீடங்களில் இரண்டான அமரபுர பீடமும், ராமன்ய பீடமும் கூட்டறிக்கை ஊடாகப் அரசியல் தலைவர்களையும் பொதுமக்களையும் கோரியிருக்கின்றன. அதேவேளை, 20ஆவது திருத்தச் சட்ட வரைவைக் கைவிடுமாறு கத்தோலிக்க ஆயர் பேரவை அறிக்கையூடாக அரசிடம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாம் நாடியிருந்தோம். அந்தத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் மட்டும் நிறைவேற்ற முடியாது எனவும், சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் கோரி மனுத்தாக்கலும் செய்திருந்தோம். அதற்கமைய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் வெளிவந்துள்ளது. நான்கு முக்கிய சரத்துக்கள் தொடர்பில் எமக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற்றுள்ளோம்.

எனவே, ராஜபக்ச அரசு தயாரித்துள்ள 20ஆவது திருத்தச் சட்ட வரைவு நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட முடியாது. இது மக்களின் இறையாண்மையைப் பாதிக்கின்ற சட்ட வரைவு என்பதால் அவர்களின் ஆணையைப் பெற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

இந்தநிலையில், 20ஆவது திருத்தம் தொடர்பில் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.

20ஆவது திருத்தத்துக்கு எதிரான எந்தக் கருத்துக்களையும் நாம் வரவேற்கின்றோம். குறித்த  திருத்தச் சட்ட வரைவைத் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று கோரி பௌத்த மத பீடங்களும், அந்தத் திருத்தச் சட்ட வரைவை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கத்தோலிக்க ஆயர் பேரவையும் அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. இதை நாம் வரவேற்கின்றோம்.

நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுவதற்கும் சர்வாதிகாரம் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்படாமல் இருப்பதற்கும் மக்களின் இறையாண்மையின் அடிப்படையில் மக்களின் கருமங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் உயர்நீதிமன்றத்தில் நாங்கள் ஒரு தீர்ப்பைப் பெற்றிருக்கின்றோம். இந்தநிலையில், பௌத்த பீடங்களினதும், கத்தோலிக்க ஆயர் பேரவையினதும் 20ஆவது திருத்தத்துக்கு எதிரான எதிர்ப்புக் குரலை வரவேற்கின்றோம். அதேவேளை,  பௌத்த பீடங்களும், கத்தோலிக்க ஆயர் பேரவையும் நாட்டில் புதிய அரசமைப்பு ஒன்று உருவாக்கப்படுவதற்கும் பாடுபட வேண்டும்.

அந்தப் புதிய அரசமைப்பு நாட்டிலுள்ள சகல இன மக்களும் அனைத்து உரிமைகளுடன் – அடிப்படை உரிமைகளுடன் – ஜனநாயக உரிமைகளுடன் – மனித உரிமைகளுடன் – அரசியல் உரிமைகளுடன் வாழ்வதற்கு வழிசமைக்க வேண்டும். அந்தக் கருமத்தில் பௌத்த பீடங்களும், கத்தோலிக்க ஆயர் பேரவையும் தங்களது கவனத்தைச் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம்.  நாடு முன்னேற்றமடைய வேண்டுமெனில் அந்தக் கடமையிலிருந்து எந்தத் தரப்பும் விலக முடியாது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.