தமிழரின் போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் திட்டமும் 20இன் பின்னால் இருக்கின்றது – நாடாளுமன்றில் விக்னேஸ்வரன் எச்சரிக்கை

“அரசமைப்பின் 20 ஆவது திருத்தம் ஊடாக ஜனநாயகத்தில் இருந்து சர்வாதிகாரத்தை நோக்கி ஆட்சிப் பண்புகளின் பரிணாமம்  திசை மாறுவதற்கான காரணம் வெறுமனே பதவி மோகம் மட்டும் அல்ல. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சில அரசியல் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையாக இதனைப் பார்க்கின்றோம். தமிழ் மக்கள் தம் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் மேற்கொண்டு வரும் ஜனநாயக ரீதியான போராட்டங்களை மேற்கொள்வதற்கு காணப்படும் ஒரு சில ஜனநாயக இடைவெளிகளையும் அடைத்து இரும்புக் கரம் கொண்டு எமது போராட்டத்தை நசுக்குவதற்கான  ஒரு நிகழ்ச்சித்  திட்டமும் 20 ஆவது திருத்த சட்ட வரைவின் பின்னால் இருக்கின்றது என உணர்கின்றோம்.”

– இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் சபையில் நேற்று தெரிவித்தார்.

20 ஆவது திருத்தப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

யார் யார் எல்லாம் இந்த 20 ஆவது சட்ட திருத்தத்தை கொண்டு வருவதற்கு இன்று பாடுபடுகிறார்களோ, யார் யார் எல்லாம் இதற்கு ஆதரவு அளிக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் எதிர்காலத்தில் இதே சட்ட திருத்தத்தை நீக்க வேண்டும் என்று வீதிகளில் இறங்கிப் போராடும் நிலை நிச்சயம் ஏற்படும் என்றும், கட்சி பேதம்  இன்றி அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தச் சட்ட திருத்தத்தை தோற்கடிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அவர் தனது உரையில் மேலும் கூறியதாவது:-

“மத்தியில் ஒவ்வொரு கட்சியும் ஆட்சிப்பீடம் ஏறும்போது நாட்டைப் பற்றிச் சிந்திக்காது, நாட்டு நலன்கள் பற்றிச் சிந்திக்காது தமது கட்சிகளின், அங்கத்தவர்களின், ஆதரவாளர்களின் நலன்களை முதன்மைப்படுத்தி சட்டங்களை இயற்றிவருவது இந் நாட்டின் துர்திஷ்ட வரலாறாகத் தொடர்ந்து வந்துள்ளது. லீ குவான் யூ க்களாக பரிணமிக்க விரும்புபவர்கள் தமது பக்கசார்பான சிந்தனைகளைக் கைவிட்டால்த்ததான் நாட்டிற்கு நன்மை செய்யலாம். லீ குலான் யூ சீன பௌத்த பாதையில் செல்லவில்லை. அவர் சிங்கப்பூர் மக்கள் அனைவரையும் நேசிப்பவர். சிறுபான்மையினரை பயங்கரவாதிகள் என்று சிந்திப்பது பெரும்பான்மையினரிடம் இருந்து வாக்குகளைப் பெற்றுக் கொடுக்கும். ஆனால் நாட்டை முன்னேற்றவிடாது. ஆகவே இந்த 20வது திருத்தச்சட்டம் மூலமாக அதிகாரத்தை தனிமனிதர் ஒருவரிடம் குவிக்கும் எண்ணத்துடன் தான் கொண்டுவரப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்திற்கும் மனித உரிமைகளுக்கும் சாவு மணி அடிக்கப் போகின்றது.

மனித நாகரிகம் முன்னேற முன்னேற எவ்வாறு ஜனநாயக பண்புகளை மேலும் மேம்படுத்தி மனித உரிமைகள், சமத்துவம் மற்றும் சகவாழ்வுடன் கூடிய வாழ்க்கையினை ஏற்படுத்தலாம் என்று உலக நாடுகள் சிந்தித்து செயற்பட்டுவரும் இந்தவேளையில் ஜனநாயகத்துக்கு சாவு மணி அடித்து நல்லாட்சிக்குரிய பண்புகளை குழிதோண்டி புதைக்கும் விசித்திரம் இந்த நாட்டில் இடம்பெறுகின்றது.

ஜனநாயகத்தில் இருந்து சர்வாதிகாரத்தை நோக்கி ஆட்சி பண்புகளின் பரிணாமம்  திசை மாறுவதற்கான காரணம் வெறுமனே பதவி மோகம் என்று மட்டும் நான் பார்க்கவில்லை. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சில அரசியல் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையாக நான் இதனை பார்க்கின்றேன். தமிழ் மக்கள் தம் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் உரிமைகளை வென்றெடுப்பதற்கு மேற்கொண்டு வரும் ஜனநாயக ரீதியாக  போராட்டங்களை மேற்கொள்வதற்கு காணப்படும் ஒரு சில ஜனநாயக இடைவெளிகளையும் அடைத்து இம்ம்புக் கரம் கொண்டு எமது போராட்டத்தை நசுக்குவதற்கான  ஒரு நிகழ்ச்சி திட்டமும் இதன் பின்னால் இருப்பதாக நான் கருதுகின்றேன்.

ஜனாதிபதி செயலணி (Task force)  என்ற அமைப்பின் கீழ் சிறுபான்மையினரின் காணிகள் திணைக்களங்களினால் கையேற்கப்படுகின்றன. பாதுகாப்பு என்ற போர்வையின் கீழ் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட படையினர் தமிழ்ப்பேசும் மக்கள் தமது உணர்வுகளையும் அபிலாஷைகளையும் வெளிக்கொண்டுவராது அவர்களை கட்டுப்படுத்த வடக்கு கிழக்கில் குவித்துள்ளார்கள். வனத் திணைக்களம் போன்றவை மக்களின் பாராம்பரிய காணிகளைக் கையேற்றுக் கொண்டிருக்கின்றனர். அரச அரவணைப்பின் பின்னணியில் சட்டத்திற்கு புறம்பாக எமது வளங்கள் சூறையாடப்பட்டுவருகின்றன. மகாவலியின் கீழ் பிற மாகாண மக்கள் எங்கள் மாகாணங்களில் குடியேற்றப்படுகின்றனர். ஆனால் வாக்குறுதி அளித்த மகாவலி நீர் ஒரு சொட்டேனும் வடக்கு நோக்கி வரவில்லை. எமது எந்திரிகளின் கூற்றுப்படி அது என்றுமே வராது. இது தான் வடக்கு கிழக்கின் இன்றைய நிலைமை.

கடந்த 20 வருடங்களாக இனப்பிரச்சனையை மையப்படுத்திய புதிய அரசியலமைப்பை கொண்டு வரப்போவதாக மக்களிடத்தில் ஆணைகேட்டு ஆட்சிபீடம் ஏறிய எவரும் அதனை நிறைவேற்றவில்லை.  அதேபோல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக ஆணைகேட்டு ஆட்சிபீடம் ஏறிய எவரும் கூட  அதையும் நிறைவேற்றவில்லை. ஆனால், இந்த அரசாங்கம் கடந்த உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் ஏதோ நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டதனால் ஏற்பட்ட சம்பவமாக உருவகித்து ஜனாதிபதியின் அதிகாரத்தை மேலும் கூட்ட முனைகின்றது.

இதனால்த்தான் ஜனாதிபதி கட்டுப்பாடற்ற அதிகாரங்களைப் பெற வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஒரு கள்வனையோ அல்லது ஒரு குண்டுதாரியையோ பிடிக்கவேண்டுமாக இருந்தால் நிறைவேற்று ஜனாதிபதி இருந்தால்தான் பிடிக்க முடியும்  என்ற இந்த சிந்தனை முட்டாள் தனமானதாக அல்லவா  இருக்கிறது. உண்மையில் ஏப்ரல் சம்பவம் இடம்பெறுவதற்கு பாதுகாப்பு படை அதிகாரிகளின் அசட்டையீனமும் பாதுகாப்பு படைகள் அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்தமையுமே பிரதான காரணங்காளாகும்.

நீதித்துறை, காவல்த்துறை மற்றும் பொது அலுவலர் சேவை ஆகியனவற்றை சுதந்திரமாக செயலாற்றவிட்டிருந்தால் ஏப்றில் அனர்த்தம் நடைபெற்றிராது.

உலகில் அநேகமான நாடுகளில் ஜனாதிபதி முறை ஆட்சி  இல்லை. அப்படியாயின் அந்த நாடுகளில் எல்லாம்  பாதுகாப்பு பிரச்சனை இருக்கிறதா? அல்லது ஜனாதிபதி முறையுள்ள நாடுகளில் பாதுகாப்பு பிரச்சினை இல்லாமல் இருக்கின்றதா?  ஆகவே மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதை தவிர்த்து இந்நாட்டின் சாபமாக உள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை முற்றாக களைந்து மக்களுக்கு நேரடியாக பொறுப்புக்கூறக் கூடிய சட்டத்தின் ஆட்சியை பலபப்டுத்த நாம் முயற்சிக்க வேண்டும். நீதித்த துறை, பொலிஸ் துறை போன்ற நிறுவனங்கள் சுயாதீனத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு  மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றி சிந்திப்பதே  நாட்டை பற்றி நேசிக்கும் ஒவ்வோருவரின் கடமையாகும்.

நீதித்துறை, காவல்த்துறை மற்றும் பொது அலுவலர் சேவையை ஒரே நிறைவேற்று ஜனாதிபதியின் மேற்பார்வையின் கீழ்க் கொண்டுவருவது பாரிய எதிர்விளைவுகளை எதிர்காலத்தில் உண்டாக்கும்.
இந்த  அரசு இன்னும் 6 மாதகாலத்தில் புதிய அரசியல் அமைப்பை கொண்டுவர உள்ளதாக தெரிவிக்கும் போது இத்தகைய ஒரு சட்ட திருத்தத்தை அவசரகதியில் கொண்டுவர முனைவதானது அவர்களுக்கு பின்னால் இருக்கும் இரகசிய நிகழ்ச்சி நிரல் ஒன்று இருப்பதையே தெட்டத் தெளிவாக காட்டுகின்றது.
ஒரு உதாரணத்தை இனித் தருகின்றேன்.

குழுநிலை நேர திருத்தங்களின் போது நடைபெறப்போகும் 20வது திருத்தச்சட்டத் திருத்தங்கள் கணக்காளர் நாயகத்தின் அதிகாரங்களை கட்டுப்படுத்தவிருக்கின்றன. அரசாங்கம் அல்லாது அரச கூட்டுத்தாபனம் நூற்றிற்கு ஐம்பது சதவீதப் பங்குகளைக் கொண்டிருக்கும் கொம்பனிகள் கணக்காய்வுக்கு கணக்காளர் நாயகத்தால் உட்படுத்தப்பட வேண்டும் என்ற அரசியல் யாப்பில் ஏற்பாடுகள் வெளியேற்றப்படவிருக்கின்றன.

அப்படியானால் ஜனாதிபதியின் செயலகமும், பிரதம மந்திரியின் செயலாளரும் முன்னர் கணக்காளர் நாயகத்தின் ஆய்வில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்து பின்னர் இருவரையும் குழுநிலை நேர திருத்தப்படி திரும்பவும் ஆய்வுக்கு உட்படுத்த விளைந்த காரணம் யாது? முக்கியமான கேள்வி என்னவென்றால் அரசாங்கத்தால் உரிமை கொண்டாடப்படும் கம்பனிகள் இதுவரை காலம் நடைபெற்ற கணக்காளர் ஆய்வில் இருந்து இன்று நீக்கப்பட்டுள்ளமையின் காரணம் யாது?

இதன் முக்கியத்துவம் உச்ச நீதிமன்றத்தில் சட்டத்துறை தலைமையதிபதி அவர்களினால் இயற்றப்பட்ட அவரின் கருத்துப் பரிமாற்றத்தைக் கூடிய முக்கியத்துவம் பெறுகின்றது. அவர் பின்வருமாறு கூறியுள்ளார் – அரசியல் யாப்பின் உறுப்பிரை 154ல் ஏதாவது நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெறாவிட்டால் கணக்காளர் நாயகத்தின் நியாயாதிக்கம் அதன் பொருட்டு நீக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம் இல்லை. கணக்காய்வுக்கு உள்ளடக்கப்படவேண்டிய அலகுகள் அனைத்தும் 2018ம் ஆண்டின் 19ம் இலக்கச் சட்டமான தேசிய கணக்காய்வுக் கூட்டத்தின் பிரிவு 55ன் கீழ் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படும் என்றார்.

யார் யார் எல்லாம் இந்த 20 ஆவது சட்ட திருத்தத்தை கொண்டு வருவதற்கு இன்று பாடுபடுகிறார்களோ, யார் யார் எல்லாம் இதற்கு ஆதரவு அளிக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் எதிர்காலத்தில் இதே சட்ட திருத்தத்தை நீக்க வேண்டும் என்று வீதிகளில் இறங்கி போராடும் நிலை நிச்சயம் ஏற்படும் என்பதை நான் பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன். இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இன்று நீங்கள் கொண்டுவரும் இந்த சட்ட திருத்தும், உங்கள் மீதும், உங்கள்  பிள்ளைகள் மற்றும் எதிர்கால உங்கள் சந்ததியினர் மீதும் ஒரு பூமராங் போல மாறும்.  உங்கள் கண்களை உங்கள் விரல்களினாலேயே குத்தாதீர்கள். இரண்டு தரப்பிலும் உள்ள எனதருமை சகாக்களே! இந்த 20 ஆவது சட்ட திருத்தம் நாளை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட அனுமதிக்காதீர்கள்.

மனித உரிமைகள், ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் சமாதானம் ஆகியவற்றை நேசிக்கும் அனைவரும் எமக்கு இடையேயான கட்சி வேறுபாடுகளை மறந்து இந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்படுவதைத் தடுக்கவேண்டும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.