கொவிட் – 19 தொற்று தற்போது சமூகத்தில் வலுவாக பரவுவதனால் சிறுவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம்-யாழ் மாவட்ட போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.யமுனாநந்தா.

கொவிட் – 19  தொற்று தற்போது சமூகத்தில் வலுவாக பரவுவதனால் அது சிறுவர்களைத் தாக்கும் போது சிறுவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என யாழ் மாவட்ட போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்தார்.
கொவிட் 19 நோய் சமூகத்தில் பரவுகின்றபோது சிறுவர்களையும் அதிகளவாக தாக்கக்கூடிய தொற்றுநோய் ஆகும். இதனால் சிறுவர்களிற்கு பல்வகையான பாதிப்புக்கள் ஏற்படுகிறது. இதேவேளை சிறுவர்களுக்கு சாதாரணமாக வரும் இருமல், தடிமன், ஆஸ்துமா நோய்கள் காணப்படுகின்ற போது அவற்றையும் தவறுதலாக கொவிட்- 19 தொற்றுநோய் என்று தவறுதலாக சிகிச்சைகள் அளிக்கப்படாது அல்லது சிகிச்சைகள் பின்தள்ளப்படுகிறது. எனவே ஏற்கனவே ஆஸ்துமா நோயுள்ள சிறுவர்களிற்கு மருந்துகள் முறையாக வழங்கப்படுதல் வேண்டும். அதேபோல் சிறுவர்கள் தூசுகளிற்குள் விளையாடுகின்றபோது தொண்டை அழற்சி நோய் உருவாகலாம் அத்தகைய சந்தர்ப்பத்தில் அதற்குரிய மருந்துகள் எடுக்கப்படுதல் வேண்டும்.
மேலும் சிறுவர்களின் ஆரோக்கியத்திற்கு உணவு மிகவும் இன்றியமையாதது. சிறந்த போசனை மிகு உணவுகளை வழங்குதல் மூலம் கொவிட் -19 தொற்று நோய் ஏற்படும் காலங்களில் பாதிக்காத வகையில் தவிர்க்கலாம். குறிப்பாக புரதசத்து நிறைந்த பால் முதலானவற்றை எடுத்தல் வேண்டும். எனவே சிறுவர்களிற்கு கொவிட்-19 தொற்று ஏற்படுகின்றபோது காய்ச்சல்,இருமல், தொண்டை நோ காணப்படலாம் ஆதலால் வைத்தியரின் ஆலோசனைப்படி மருந்தெடுத்தல் வேண்டும்.
குழந்தை மற்றும் சிறுவர்கள் வீடுகளில் உள்ளவர்கள் பொது இடங்களிற்கு சென்று விட்டு வந்தால் கைகளை நன்கு கழுவுதல் வேண்டும். குறிப்பாக அதிகளவானோர்களுடன் பழகுவதனை தவிர்ப்பதன் மூலம் வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுவதனை தவிர்க்க முடியும். எனவே வீட்டில் சிறுவர்களிற்கு கொவிட் தொற்று நோய் ஏற்படுவதற்கு வீட்டில் உள்ள பெரியவர்கள்தான் காரணமாக உள்ளார்கள் ஆதலால் அனைவரும் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். மேலும் நெருக்கமான பிரதேசங்களில் சிறுவர்கள் விளையாடுவதனாலும் அயலில் உள்ளவர்களின் தொடுகையாலும் தொற்று நோய் பரவலாம். தற்போதைய சூழ்நிலையில் அடிக்கடி கைகளை கழுவும் பழக்கத்தினை சிறுவர்களிடம் ஏற்படுத்துதல் வேண்டும். மேலும் கொவிட் தொற்று நோயினால் சிறுவர்கள் அதிகளவில் உளரீயாக பாதிக்கப்படலாம் ஆதலால் இது குறித்த விழிப்புணர்வும் அவசியமாகும். சிறுவர்களின் உணவிலும் கவனம் செலுத்துதல் வேண்டும் குறிப்பாக இலைவகைகள், பழவகைகள், மீன், நெத்தலி முதலான உணவுகளை வழங்குதல் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.