பிரதான குருதி வங்கியில் குருதிக்கு தட்டுப்பாடு;மக்களிடம் வேண்டுகோள் விடுப்பு.

இலங்கையின் பிரதான குருதி வங்கியில் குருதிக்கு தட்டுப்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவி வரும் கொவிட்-19 நோய்த் தொற்று நிலைமைகளினால், நோயாளிகளுக்கு குருதி வழங்குவதில் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது.

அண்மைக் காலமாகவே இரத்த தான நிகழ்வுகள் நடத்துவதில் பெரும் நெருக்கடி நிலைமை காணப்பட்டதனால் குருதி வங்கியில் போதியளவு கையிருப்பு கிடையாது என இரத்த வங்கியின் பணிப்பாளர் டொக்டர் லக்ஸ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் காரணமாக இரத்த தானம் செய்ய வரும் கொடையாளர்களுக்கு வருகை தர முடியாதுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

குருதிக்கு நிலவி வரும் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு கொடையாளர்கள் இரத்த தானம் செய்ய முன்வர வேண்டுமென அவர் மக்களிடம் கோரியுள்ளார்.

அத்துடன் நடமாடும் இரத்த சேகரிப்பு நடவடிக்கையானது நீண்ட காலமாக செயற்படுத்தப்படவில்லை எனவும், விசேடமாக மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து இரத்த தான நிகழ்வு பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய இரத்த பரிமாற்று மையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்தார்.

மேலும் இரத்த தானம் செய்வதற்கு முன்வருபவர்களுக்கு அவர்களுக்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதோடு, தகவல்களை பெற்றுக்கொள்ள தேசிய இரத்த பரிமாற்று மத்திய நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்