சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி தடை போடுவது” போன்று முஸ்லிம்களின் ஜனாஸா விடயத்தில் சுகாதாரத்துறை நிபுணர்கள் குழு செயற்படுகிறது-ஹரீஸ்

முஸ்லிம்களுடைய ஜனாஸா தகனம் செய்யும் விடயத்தில் சுகாதார அமைச்சின் தொழில்நுட்பக் குழு சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுப்பதில்லை போன்று செயற்படுவதாக இன்று பாராளுமன்றத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்து இருந்தார்.

உள்ளூராட்சி மாகாண அமைச்சின் வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் அவர் உரை நிகழ்த்துகையில்…

இந்த சபையில் உள்ளூராட்சி மாகாண சபைகளுக்கு பொறுப்பாக உள்ள அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்ற இந்த சூழ்நிலையில் சில விடயங்களை அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரலாம் என்று நினைக்கின்றேன்.
குறிப்பாக கடந்த அரசில் உள்ளூராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராக இருந்தவன் என்ற ரீதியில் இந்த நாட்டில் 25 மாவட்டங்களில் நகரங்களை அபிவிருத்தி செய்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியைப் பெற்று sustainable Town development project (நிலைபேறான நகர அபிவிருத்தி திட்டம்) திட்டத்தை அமுல் படுத்த உள்ளூராட்சி அமைச்சு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்தது.இது ஒவ்வொரு மாவட்டத்தில் ஒவ்வொரு நகரத்தினை தெரிவு செய்து இந்த நாட்டில் நகர அபிவிருத்தியை மேற்கொள்ளுகின்ற சிறந்த திட்டமாக இருந்தது.

குறிப்பாக உலக வங்கி நாட்டின் பிரதான 09 நகரங்களை அபிவிருத்தி செய்வது போன்று ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த திட்டத்தை மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில் இப்போது துரதிர்ஷ்டவசமாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்ட திணைக்கள தலைவர்களுக்கு அறிவித்து இருக்கின்றார் இந்த திட்டத்தை நிதி அமைச்சு மேற்கொண்டு செல்வதற்கு முடிவு எடுக்கவில்லை என்பதனால் இதனை இடை நிறுத்துகின்றோம் என அறிவித்து இருக்கின்றார்.

கெளரவ அமைச்சர்களே! இந்த நாட்டின் அபிவிருத்திக்காக நிதி அமைச்சர்,ஜனாதிபதி ஆகியோருடன் இது விடயமாக பேசி நிலைபேறான நகர அபிவிருத்தித் திட்டத்தினை நாடு பூராகவும் மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அதே போன்று நான் பிரதிதித்துவப்படுத்தும் அம்பாறை மாவட்டத்தில் நான் உள்ளூராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராக இருந்த போது சம்மாந்துறை பிரதேச சபை வளர்ச்சியடைந்த மிகப் பெரிய சனத்தொகையைக் கொண்ட ஒரு நகரமாகும்.இதனை நகர சபையாக ஆக்குவதற்குரிய முழு நடவடிக்கைகளையும் நான் எடுத்து இருந்தேன்.துரதிர்ஷ்டவசமாக இறுதிக்கட்டத்தில் அதனை வர்த்தமாணி அறிவிப்பு செய்ய முடியாமல் போய்விட்டது.
எனவே உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் சம்மாந்துறை பிரதேச சபையினை நகர சபையாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்த சபையில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

அதேபோன்று இந்த நாட்டில் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதி என்ற அடிப்படையில் கொரோனாவினால் உயிரிழக்கின்றவர்களின் உடல்களை அடக்கம் செய்வது சம்மந்தமாக அரசாங்கத்தின் தலைவர்கள் அமைச்சரவையில் பல முறைபேசி இணக்கப்பாட்டுக்கு வந்து நடவடிக்கைகள் எடுத்த போதிலும் இந்த நாட்டில் இருக்கின்ற சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப நிபுணர்கள் குழு இது சம்மந்தமான ஒரு எதிர்ப்பினை தெரிவித்து அடக்கம் செய்வற்கான முடிவினை தள்ளி வைத்துள்ளனர். உண்மையில் உலகளாவிய ரீதியில் 200 நாடுகளில் உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றது. குறிப்பாக உலகில் உள்ள விஞ்ஞானிகளில் தலைசிறந்து விளங்குகின்ற அமெரிக்கா,ரஸ்யா போன்ற பல நாடுகளில் அடக்குவதற்கு அங்குள்ள சுகாதாரத்துறை நிபுணர்கள், விஞ்ஞானிகள் அனுமதியளித்த போது இந்த நாட்டில் மட்டும் ஜனாசாக்களை அடக்குவதற்கான அனுமதியினை தொழில்நுட்ப நிபுணர்கள் குழு வேண்டும் என்றே ஒருதலைப்பட்சமாகவும், பாராபட்சமாகவும் நிராகரித்து வருவது மிகவும் வேதனையளிக்கின்ற விடயமாகும்.

அண்மையில் ஒரு பேட்டியில் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர் ஜினதாஸ கடுப்பேத்த பேசுகின்ற போது உடல்களை அடக்குவதைவிட இந்த நாட்டில் கொரோனா நோயாளிகள் சுமார் 60க்கு மேற்பட்ட வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த கொரோனா நோய்யாளிகளினால் வெளிப்படுத்தப்படுகின அவர்களின் மலசலம்,கழிவு நீர்கள் உட்பட அனைத்தும் நிலத்திற்கு செல்லுகின்றன எனவே அவைகள் இந்த மரணித்த உடல்களை விட பாரதூரமான கழிவுகளாக இருக்கின்றது.இது மரணித்த உடல்களை அடக்குவதை விட இந்த நோய்யாளிகளின் கழிவு நீர்கள் கடும் ஆபாதனதும், வைரசுகளை பரப்பும் என்றும் ஏற்றுக்கொண்டு கூறி இருகின்றார்.அவ்வப்போது கொரோனா வைத்தியசாலைகள், தனிமைப்படுத்தும் நிலையங்களில் உள்ள கழிவுகள் நிலத்திற்கு சென்று அந்த வைரசுக்கு உந்துசக்தியாக இருக்கின்றது. இது சம்மந்தமாக சுகாதார தொழில்நுட்ப நிபுணர்கள் வாய் திறக்கவில்லை. உண்மையில் அடக்கம் செய்வதற்கான உடல்கள் முறையான அடிப்படையில் பொதி செய்து பெட்டியில் வைத்து ஒரு நிலத்தடி நீர் குறைமட்டம் உள்ள இடத்தில் அடக்கம் செய்கின்ற பொழுது கொரோனா பரவும் என்ற ஆபத்து இல்லாமல் போய்விடும். இதனை அடக்கம் செய்யும் போது சமூக ரீதியான பிரச்சினைகள் எழும் என்பது எங்களுக்கு தெரியும். இதனால்தான் முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழுகின்ற வட-கிழக்கு மாகாணத்தில் பல உயர் நிலங்கள் உள்ள பிரதேசங்களின் ஊர் தலைமைகள் முன்வந்துள்ளார்கள் தங்களுடைய பிரதேசங்களில் வந்து இந்த உடல்களை அடக்குவதற்கும் அதற்கான அனுமதியினையும் தந்து இருக்கின்றார்கள்.

அவ்வாறு இருக்கின்ற போது கிழக்கு மாகாணத்தில் உயர் பிரதேசத்தில் உள்ள இடங்களை தெரிவு செய்து சுகாதார அமைச்சர் உடனடியாக தலையிட்டு இந்த தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவை அதற்கான ஆய்வுகளை செய்து ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியினை வழங்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன். மனிதனின் வாழ்வியலில் இறுத்திக்கட்டமாக ஒவ்வொரு மனிதனும் நினைப்பது தான் நிம்மதியாக மரணித்து நிம்மதியாகவும், கெளரவத்துடனும் தனது இறுதிக்கிரியைகள் நடைபெற வேண்டும் என்று ஒவ்வொரு மனிதனின் அவாவாக இருக்கின்றது.

எனவே இந்த மனிதநேயப் பண்புக்கு மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட எமது நாட்டில் மனிதனுடைய பாரம்பரிய ஆசையை நிறைவேறுவதற்கு எமது நாட்டின் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தலையிட்டு தீர்வைப் பெற்றுத் தர வேண்டும்

இது சம்மந்தமாக இந்த நாட்டின் அமைச்சரவையில் உள்ள உயர் தலைவர்கள் கடந்த பலமுறை சாதகமான முடிவுகளை எடுத்தாலும் கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி தடையாக இருப்பது போன்று இந்த நடவடிக்கைகள் இருந்து கொண்டு இருக்கின்றது. எனவே அவசர அவசரமாக இந்த விடயத்தில் அரசாங்கத்தின் சிரேஸ்ட தலைவர்கள் தலையிட்டு ஒரு நியாயமான தீர்வினை பெற்றுத் தருமாறு வேண்டுகின்றேன் என குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.