(நேர்காணல் ) தோட்டக் கட்டமைப்பை மாற்றுகின்றபோது தங்கியிருத்தலை இல்லாமல் செய்ய முடியும்; முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் -திலகராஜ்

நிறைவேற்றதிகார ஜனாதிபதியே 1000 ரூபா கொடுங்கள் என்று சொன்னாலும் கூட கொடுக்க முடியாத தொகைதான் அது. நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கும் 1000 ரூபா கோரிக்கைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. கோத்தபாய ராஜபக்‌ஷ நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக இருந்தாலும் அவரால் பெற்றுக்கொடுக்க முடியாது. 2020 ஜனவரியில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்த பின்னர் பாராளுமன்றில்  உரையாற்றும்போது, நிறைவேற்றதிகாரத்தினை பயன்படுத்தினாலும் ஜனாதிபதியினால் 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முடியாது என்று கூறியிருந்தேன் என, நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் முன்னாள் பொதுச்செயலாளருமான
மயில்வாகனம் திலகராஜ்; தமிழ்CNN இணையத்தளத்திற்கு அளித்த நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவருடனான நேர்காணல் வருமாறு,
01) கேள்வி :- மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பாக அரசாங்கத்தின் பார்வை எவ்வாறுள்ளது ?

பதில் :- மாற்றுப்பார்வை, பிற்போக்கான பார்வையே இருக்கின்றது. பிரிட்டிஷாரால் அழைத்து வரப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் வெறும் அந்நியர்களாகவே பார்க்கப்பட்ட நிலை இன்றைய அரசாங்கம் வரை தொடர்கிறது.

02) கேள்வி :- தோட்டங்களை நடாத்துகின்ற கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களுக்கு காப்புறுதி ஏற்பாடுகளை செய்யாமைக்கான பின்னணி ?

பதில் :- தோட்டத் தொழிலாளர்களாக இப்போது தமிழர்கள் மாத்திரம்தான் இருக்கின்றார்கள். ஆனால் பெருந்தோட்டத்துறை என்பது தமிழ் மக்களும் சிங்கள மக்களும் சேர்ந்தது. மிகச்சிறியளவில் முஸ்லிம்களும் உள்ளனர். தேயிலை, இறப்பர் என்று சொல்லப்படுகின்ற பெருந்தோட்டத்துறையினை சிங்கள மக்கள் மத்தியில் சிறுதோட்ட உரிமையாகவும் தமிழ்மக்கள் மத்தியில் பெருந்தோட்டங்களாகவும் நிர்வகிக்கின்றார்கள். சிங்கள மக்களுக்கு நிலத்தையே பகிர்ந்து கொடுத்து அதில் வரும் அறுவடையினை கொள்வனவு செய்வதன் ஊடாக உற்பத்தி செய்யப்படுகின்றது. பெருந்தோட்டத்துறையிலுள்ள தமிழர்கள் தொழிலாளர்களாக அமர்த்தி வைக்கப்பட்டு அவர்களை முகாமை செய்வதன் ஊடாக செய்யப்படுகின்றது. சிறுதோட்டமென்றால் சிங்களவர்களுக்கான உரிமையினையும் பெருந்தோட்டத்தில் தொழிலாளிகளாக வைக்கப்பட்டுள்ள நிலைமை வேறுபாடும் யாவரும் அறிந்ததே. எனவே பெருந்தோட்டத்தை செய்கின்ற முதலாளித்துவ கம்பனிகள் காப்புறுதி, தொழிற் பாதுகாப்பு போன்றவற்றை செய்து தொழிலாளர்களை பாதுகாக்கும் தேவை இருக்காது, கம்பனிகளைப் பொறுத்தவரைக்கும் உழைப்பை உறிஞ்சுவதற்கு எந்தளவு தூரம் எந்தளவுக்கு உழைப்பாளிகளை பயன்படுத்துவார்களோ அவ்வாறு பயன்படுத்துவார்கள். அந்த கம்பனிகளிடம் காப்புறுதியை எதிர்பார்ப்பதென்பது தவறு என்பதுதான் எனது கருத்து.

03) கேள்வி :- பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு சில வீட்டுத்திட்டங்களினால் மக்களின் வாழ்வியல் மாற்றப்பட்டுள்ளதென கருதுகின்றீர்களா ?

பதில் :- நிச்சயமாக மாற்றம்பெறும், மாற்றம் பெற்றுள்ளதென சொல்லமாட்டேன். அதற்கான தேவைப்பாடுகள் இருப்பதனாலேயே வீட்டுத்திட்டங்கள் உருவாகின்றது. மலையகத்திலுள்ள லயம் என்ற கட்டமைப்பினை வீடாக மாற்றிவிட்டால் பிரச்சினை தீர்ந்ததாக வெளியிலிருந்து பார்க்கப்படுகிறது. ஆனால் அப்படி அல்ல. லயம் என்பது வீடுதான். கட்டிக்கொடுக்கப்படுவதும் தனி வீடுதான். லயத்திலுள்ளவர்களை தனி வீட்டில் மாற்றுவதனால் இது சாத்தியப்படும் என்று நான் நினைக்கவில்லை.


மாறாக தோட்டம் என்பதிலிருந்து கிராமம் என்கின்ற ஒரு எண்ணக்கரு மாற்றம் அனைவர் மனதிலும் வரவேண்டும். எனவே வீடு கட்டுதல் என்பதை வீடு கட்டுதலாக பார்க்காது கிராமங்கள் அமைத்தலாக பார்க்க வேண்டும். கிராமத்தின் அடிப்படை வீடுதான். பல வீடுகள் கொண்ட ஒரு குடியிருப்பே கிராமமாகும்.

தோட்டம், தோட்டங்கள் என்று சொல்லுவதுதான் எங்களுடைய மரபு, தோட்டம் என்றுதான் சொல்ல வேண்டும் என தொழிலாளர்கள் சொல்லுகிறார்கள். கிராமத்தை ஆங்கிலத்தில் village என்கிறோம். மலையகம் தவிர்ந்து ஏனையவற்றில் கிராமம் என்றால் எப்படியிருக்குமென்று எல்லோருக்கும் தெரியும். தோட்டத்தை ஆங்கிலத்தில்
எஸ்டேட் என்பர். எஸ்டேட் என்பதை தோட்டம் என்று தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டோமே தவிர தோட்டம் என்பதை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தால் Garden என்றே வரும். எஸ்டேட் என்பதன் உண்மையான அர்த்தம் அசையாசொத்து என்பதாகும். ஆரம்ப காலத்தில் பிரிட்டிஷ்காரர்களுக்கு சொந்தமானதே எஸ்டேட் ஆகும். அந்த எஸ்டேட் கலாசாரம் தொடர்ந்ததனாலேயே எஸ்டேட் என்பது கம்பனிகளின் சொத்தாக இருக்கிறது. எனவே கம்பனிகளில் வேலை செய்கின்ற தொழிலாளிகளை அந்தக் கம்பனிக்காரர்கள் தொழிலாளர்களையும் சொத்தாகவே உபயோகிக்கிறார்கள். நடைமுறையில் ரியல் எஸ்டேட் எனும் வார்த்தை ஒரு வணிகம் என்ற கோணத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.

ஆகவே தோட்டம் என்கின்ற எண்ணக்கருவிற்குள் இருக்கும் வரைக்கும் முதலாளிகளின் அடிமைகளாக தொழிலாளர்கள் வைக்கப்படுகிறார்கள் என்பது உணரப்பட வேண்டும். அது வீடமைப்பு திட்டத்தினூடாக கிராம முறைக்கு மாற்றப்பட வேண்டும். தோட்ட நிர்வாக முறைமையிலிருந்து சமூகத்தின் நிர்வாகம், அந்த சமூகத்தின் கைகளுக்கு செல்ல வேண்டும். எனவே மலையகத்தில் இடம்பெறும் திட்டங்களை வீட்டுத்திட்டங்களாக நோக்காது, அந்த மக்களை தோட்டங்கள் என்ற அடிமை நிலையிலிருந்து விடுவித்து சுயாதீனமாக வாழக்கூடிய கிராம நிர்வாக முறைக்கு தோட்டத்தொழிலாளர்களை மாற்ற வேண்டும். குறிப்பாக தோட்ட கட்டமைப்பு விடுபட்டு கிராம கட்டமைப்பு நிலை உருவாக்கப்பட வேண்டும்.

04) கேள்வி :- கடந்த நல்லாட்சியில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்ததா ?
பதில் :- நல்லாட்சி காலத்தில் நல்லாட்சி செய்தது என்பதை விட நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக சில விடயங்களை சாதித்துக்கொள்ளக்கூடிய அரசியல் கலாசாரம் கடந்த ஐந்தாண்டுகளில் நடைபெற்றது. ஏழு பேர்ச்சஸ் காணி உரிமைக்காக அங்கீகாரம் கொடுக்கப்பட்டது.

காணியை பெற்றுக்கொடுப்பது, காணிக்கு உரிமத்தை கொடுப்பது, வீடமைப்புத் திட்டம், மலையக மக்களுக்கான அபிவிருத்தி அதிகார சபை, தடையாக இருந்த பிரதேச சபை சட்டத்தை திருத்துவது, அதிகார, பிரதேச சபை சட்டத்தை உருவாக்குவது, பிரதேச செயலக சபைகளை அதிகரிப்பது போன்ற இப்படியான முன் ஏற்பாடுகள் இடம்பெற்றது. சுதந்திரத்திற்கு பின் மக்களை நோக்கி காத்திரமாக பணியாற்றப்பட்ட காலப்பகுதியாக 2015 – 2019 காலப்பகுதியை குறிப்பிடலாம்.

05) கேள்வி :- மலையக பெருந்தோட்ட மக்களின் நன்மை கருதி மைத்திரிபால சிறிசேனவினால் உருவாக்கப்பட்ட குழு எங்கே என்ற கேள்வி நிலகிறதே?


பதில் :- அரசாங்கத்திற்கு எந்த எண்ணப்பாடும் இல்லாத நிலையிலேயே ஒரு சில பேரின் கோரிக்கைக்காக, கண் துடைப்புக்காகவே குழு உருவாக்கப்பட்டது.

மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது இரண்டாம் பட்சமாக இருக்கட்டும். அந்த மக்களின் பிரச்சினைகளை கேட்பதை முதலாம் பட்சமாக எடுத்து ஜனாதிபதி ஆணைக்குழுவை அமையுங்கள் என்று பாராளுமன்ற மக்கள் பிரதிநிதி என்ற முறையில் மைத்திரிபாலவிடம் கேட்டேன், அவர் கடைசி வரைக்கும் செய்யவே இல்லை. எனவே ஆணைக்குழுவை நியமிக்காதவர், பிறகு யாரோ ஒருவர் கேட்டதற்காக குழுவை அமைத்தார் என்றால் அது கண் துடைப்புக்கான குழுதான். குழுவிலுள்ள உறுப்பினர்கள்தான் குழு எங்கே என்ற கேள்வியை கேட்க வேண்டுமே தவிர இவ்விடயம் தொடர்பாக சொல்ல இதை விட வேறு எதுவும் இல்லை.

                                                                          06) கேள்வி :- பெருந்தோட்ட மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த தலைவர்கள் பெருந்தோட்ட மக்களுக்கு நிரந்தர திட்டத்தினை செயற்படுத்தியுள்ளனரா ?

பதில் :- நிரந்தர திட்டத்தினை செயற்படுத்தியிருந்தால் மலையக மக்களின் நிலைமை இவ்வாறு இருந்திருக்காது. மலையக மக்களுக்காக யார் முன் வருகிறார்களோ மக்களின் பிரதிநிதிகளாக யார் வருகிறார்கள் என்பது முக்கியம். மலையக அரசியல் கலாசாரத்தில் இருக்கின்ற பாதகமான அம்சம் என்னவென்றால், தோட்டத் தொழிலாளிகள்தான் மலையகத்தின் வேர்ச் சமூகம். அந்த தோட்டத் தொழிலாளிகளாக அல்லாமல் முதலாளிகளில் ஒருவர் அந்த மக்களுக்கு தலைவராக வேண்டும். எனவே கடைசி வரைக்கும் மக்கள் நலன் சார்ந்து இருக்கமாட்டார். அடுத்தது காலத்திற்கு காலம் பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டபோதும் கூட அது கிடப்பில் போடப்பட்டன.

07) கேள்வி :- தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வுக்காக, புதிய ஜனாதிபதி போராடிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறதே ?

பதில் :- நிறைவேற்றதிகார ஜனாதிபதியே 1000 ரூபா கொடுங்கள் என்று சொன்னாலும் கூட கொடுக்க முடியாத தொகைதான் அது. நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கும் 1000 ரூபா கோரிக்கைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. கோத்தபாய ராஜபக்‌ஷ நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக இருந்தாலும் அவரால் பெற்றுக்கொடுக்க முடியாது. 2020 ஜனவரியில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்த பின்னர் பாராளுமன்றில்  உரையாற்றும்போது, நிறைவேற்றதிகாரத்தினை பயன்படுத்தினாலும் ஜனாதிபதியினால் 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முடியாது என்று கூறியிருந்தேன்

08) கேள்வி :- இலங்கையில் ஜனாதிபதிக்கு முடியாத அதிகாரங்களை, முதலாளிமார் சம்மேளனம் கொண்டுள்ளதா ?

பதில் :- கேட்க வேண்டிய தேவை இல்லை. முதலாளிமார் சம்மேளனத்திற்கென்று சட்டம் உள்ளது. ஜனாதிபதி சொன்னார் என்பதற்காக தனியார் கம்பனி சட்டங்களை மாற்றமுடியாது. சட்டமியற்றும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு இருக்கிறதே தவிர ஜனாதிபதிக்கு கிடையாது. ஜனாதிபதி என்பவர் நிறைவேற்றுபவர் மட்டுமே.

அரசாங்கம், தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்க வேண்டுமாக இருந்தால் அரசாங்கம், கம்பனிக்காரர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டிய தேவையில்லை. இலங்கையில் எல்லா தொழிலாளர்களுக்குமான குறைந்த பட்ச அடிப்படை சம்பளம் 1000 ரூபாய் என சட்டத்தில் திருத்திவிட்டால் போதும். எனவே இப்போது 400 ரூபாய் உள்ளது. தோட்டத்தொழிலாளிக்கு மாத்திரமல்லாது சாதாரண நாட்கூலியாளரும் 1000 ரூபாய் பெற முடியும். குறைந்த பட்ச சம்பள சேவைச் சட்டத்தில் 1000 ரூபாய் என திருத்திவிட்டாலே போதும்.

400 ரூபாயினை சட்டத்தில் வைத்துக்கொண்டு 1000 ரூபாயினை கொடுங்கள் என்று சொல்லுவது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோடும் விடயமே.

09) கேள்வி :- பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கை தேசிய பிரச்சினையாக கொள்ளப்படாமைக்கான பின்னணி ?

பதில் :- வடகிழக்கு அரசியலிலும் தீர்வுத்திட்டம் தொடர்பாக முன் வைத்துள்ளார்களா என்ற கேள்வி எனக்கு எழுகிறது. வடகிழக்கு அரசியல் பிரதிநிதிகள் இன்று புதிய அரசியலமைப்பை வேண்டி நிற்கிறார்கள். புதிய அரசியலமைப்புக்காக வடகிழக்கில் யுத்தம் இடம்பெறவில்லை. யுத்தத்தின் கோரிக்கை வேறு.

மலையக மக்களின் அடிப்படை பிரச்சினை குடியுரிமையில் இருந்து எழுகின்றது. மலையக மக்கள் வாக்காளர்களாக இருக்கிறார்களே அன்றி இன்னும் முழுமையான பிரஜைகளாகவில்லை. எனவே அந்த மக்களின் பிரச்சினைகளை முன்வைப்பதென்பது பிரச்சினைகளை சொல்லிக் கொண்டிருப்பதை விட தீர்வை நோக்கிய நகர்வாக இருக்க வேண்டும். அதற்காக மலையக மக்களை அர்த்தமுள்ள பிரஜைகளாக்குவதற்கு தடையாக இருக்கக்கூடிய விடயங்களை நீக்கிக்கொண்டு செல்கின்ற போதுதான் மலையக மக்களின் பிரச்சினைகள் நிறைவேற்றப்படும்.

மலையக மக்களை அரச பொது நிர்வாகத்திற்குள் கொண்டு வருவது, அரசாங்க பொதுச் சேவையை பெற்றுக்கொடுப்பது, தோட்ட முறைமையிலிருந்து மாற்றியமைப்பது, காணியுரிமை பெற்றுக்கொடுப்பது போன்ற விடயங்கள் தடையாக இருப்பதனால் அவற்றை நீக்கிவிட்டால் அவர்களது இயல்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும்.

10) கேள்வி :- மலையக மக்கள் அரசியல்வாதிகளை சார்ந்திருப்பதனாலேயே முன்னேறாமலுள்ளனர் என்ற கருத்தும் நிலவுகிறதே ?

பதில் :- மலையக தொழிலாளர்கள் தோட்ட முகாமையாளர்களில் தங்கி தோட்டங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தோட்ட நிர்வாகத்தோடு கொடுக்கல் வாங்கல் செய்பவர்களாக தொழிற்சங்கவாதிகள் இருக்கின்றனர். அந்த தொழில்சங்கவாதிகள் அரசியலாளர்களுடன் இருக்கிறார்கள்.

தோட்டங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதனாலேயே அதனூடாக வரக்கூடிய தொழிற்சங்க உறவு, அந்த தொழிற்சங்கத்திலுள்ள அரசியல் தொடர்பு என வெளிப்படையாக தெரிகிறது. தோட்டக் கட்டமைப்பை மாற்றுகின்ற போதுதான் தங்கியிருத்தலை இல்லாமல் செய்ய முடியும்.

11) கேள்வி :- தொழிலாளர் தேசிய சங்கத்தில் சேர்ந்தியங்குவதிலுள்ள சவால் ?

பதில் :- சங்கத்திலுள்ளவர்களுள் ஒரு சிலர் சிக்கலானவர்களாக இருப்பதனால், நாங்கள் விரும்பி சேர்ந்து இயங்கிய சங்கத்தை வெறுத்து இன்னொரு இடத்தில் சேர்ந்து சரி செய்துகொள்ள வேண்டும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அதாவது தேசியப் பட்டியல் கொடுக்காமல் விட்டதனால் தொழிலாளர் தேசிய தொழிற்சங்கம் சரியில்லை என்றோ, வேறு ஏதோ பதவிகள் தருகிறார்கள் என்பதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சரி என்றோ சொல்ல முடியாது. எனது அமைப்பையும் கொள்கையையும் மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன்.

12) கேள்வி :- கடந்த 2020, பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக களமிறங்காமைக்கான பின்னணி ?

பதில் :- தேர்தலை எதிர்கொள்வதற்கு  பணம் படைத்தவர்களாக இருக்க வேண்டும் என்பது எனக்கு மட்டுமல்ல அதுவொரு முறைமை. மலையகத்தில் படித்தவர்கள், சிந்தனையாளர்கள், செயற்பாட்டாளர்கள் அரசியலுக்குள் வருவதில்லையென்றால் அவர்களிடம் அதற்கான முதலீடு இல்லை என்பதேயாகும். மலையகத் தேர்தல் என்பது முதலீட்டு முறைமைக்குள் அகப்பட்டிருக்கின்றது.

(நேர்கண்டவர் :- துறையூர் மோகனதாஸ்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.