மனித உரிமைகள் தினத்தில் எமது தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்-மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் தவராஜா

இன்று மனித உரிமைகள் தினம் இதனை முன்னிட்டு அரசினால் எண்ணாயிரம் கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் நீண்ட காலமாக சிறையில் வாடும் எமது தமிழ் அரசியற் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என அதிமேதகு ஜனாதிபதியிடம் தெரிவித்துக் கொள்கின்றோம் என மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் வே.தவராஜா தெரிவித்தார்.

இன்று (10) இடம்பெற்ற மட்டக்களப்பு மாநகரசபையின் 33வது பொதுச் சபை அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் 33வது பொதுச்சபை அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய ஆணையாளரை வரவேற்றலுடன் ஆரம்பமான இச்சபை அமர்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள் உட்பட புதிய ஆணையாளர் ம.தயாபரன் மற்றும் பொறியியலாளர், கணக்காளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது நிதிக் குழுக்களின் சிபாரிசுகள் மற்றும் நிலையியற்குழுக்களின் சிபாரிசுகள், முதல்வரின் முன்மொழிகள், கொள்வனவு தொடர்பான அறிக்கை போன்ற விடயங்கள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் புதிதாக அமைக்கப்பட்டும் பல குறைபாடுகளுடன் காணப்படுகின்ற தனியார் பேருந்து நிலையத்தை மாவட்;ட அபிவிருத்திக் குழுவின் தீர்மானத்தின் படி அதன் குறபாடுகளைச் சுட்டிக் காட்டி மாநகரசபை அதனைப் பொறுப்பேற்பதுடன் நகர அபிவிருத்தித் அதிகாரசபையின் ஊடாக அக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பிலும் உறுப்பினர்களின் வாதப் பிரதிவாதங்களுடன் சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

அத்துடன் புதிய மாநகர ஆணையாளருக்கான பொறுப்புகள் கையளிப்பு மற்றும் மாநகர பிரதி முதல்வருக்கான புதிய பொறுப்புகள் கையளிப்பு போன்றனவும் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து உறுப்பினர்களின் உரை இடம்பெற்றது. இதன்போது பல்வேறு கருத்தாடல்கள் இடம்பெற்றதுடன் இடம்மாற்றம் பெற்றுச் சென்ற மாநகர ஆணையாளரைப் பாராட்டியதுடன், புதிய ஆணையாளரை வரவேற்றும் உரையாற்றியிருந்தனர்.

இதன்போதே மாநகரசபை உறுப்பினர் வே.தவராஜா அவரது உரையில் தமிழ் அரசியற் கைதிகள் தொடர்பான மேற்படி கோரிக்கையினை அதிமேதகு ஜனாதிபதிக்கு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.