முல்லை மீனவர்கள் எதிர்வரும் செவ்வாய் அன்று போராட்டம்; மாவட்டத்திலுள்ள சகலதரப்பினரும் ஆதரவு தருமாறு கோரிக்கை…
முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அன்று இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினை எதிர்த்து போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இந் நிலையில் குறித்த போரட்டத்திற்கு மாவட்டத்தின் சகலபகுதிகளிலுமுள்ள, வர்த்தக சங்கங்கள், ஏனைய பொது அமைப்புக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கவேண்டுமெனவும் மீனவர்கள் கோரிக்கையினையும் விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அண்மைக்காலமாக முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய கடற்தொழில் செயற்பாடுகள் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக உரிய அதிகாரிகள், கடற்தொழில் அமைச்சு, கடற்படையினர் என பல்வேறு தரப்பினரிடமும் முறையிட்டிருந்த போதும், இது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.
இந் நிலையில் கடந்த 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று மீனவர்கள் தாமே முன்வந்து, இந்திய இழுவைப் படகுகளை முல்லைத்தீவு கடற்பரப்பிலிருந்து விரட்டுவதற்காக படகுகளில் கடலுக்கு செல்லத் தயாராகியிருந்தனர்.
அப்போது அங்கு வருகை தந்திருந்த முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும், மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் குறித்த இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை தொடர்பான பிரச்சினையினை உரியவர்களுக்குத் தெரியப்படுத்தி, எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இதற்குரிய தீர்வினைப் பெற்றுத் தருவதாக தெரிவித்திருந்தனர்.
இருந்தபோதும் குறித்த பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுத்தருவது தொடர்பில், தமக்கு எவ்வித சாதகமான பதில்களும் உரியவர்களிடமிருந்து இதுவரை கிடைக்கவில்லை என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையிலேயே எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 15 ஆம் திகதி அன்று, மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஒரு பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
எனவே குறித்த போராட்டத்திற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர், புதுக்குடியிருப்பு சந்தைத் தொகுதி, மல்லாவி மாங்குளம், ஒட்டுசுட்டான் துணுக்காய், விசுவமடு, உடையார்கட்டு, முள்ளியவளை, தண்ணீரூற்று ஆகிய சகல பகுதிகளிலும் உள்ள வர்த்தக சங்கத்தினர் மற்றும் இதர அமைப்புகள் அனைத்தும் தமக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை மீனவர்களின் போராட்டத்திற்கு முல்லைத்தீவு தனியார் பேரூந்து உரிமையாளர்சங்கம், கரைதுறைப்பற்று கூட்டுறவாளர் சங்கம், கரைதுறைப்பற்று பிரதேசசபை, முல்லைத்தீவு வர்த்தகசங்கம், முல்லைத்தீவுமாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் என்பன மீனவர்களின் குறித்த போராட்டத்திற்கு தாம் பூரண ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை