பேரினவாத வேட்கை வேட்டை ஏமாற்றுகை- முன்னாள் மட்டக்களப்பு. ஜி.ஶ்ரீநேசன் ஊடக அறிக்கை…

இலங்கை அரசியலில் சிங்களவர்,தமிழர்,முஸ்லிம் என்ற மூன்று சமூகத்தவர்கள் ஈடுபடுகின்றனர்.இலங்கை சுதந்திரமடைந்த 1948 இல் இருந்து ஆரம்பமான அரசியலானது பல்லின,பன்மத மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தத் தவறிவிட்டது.
ஆளும் அதிகாரப் பேரின,பெரும்பான்மை மதப் பொறிமுறையானது சகல மக்களையும் சமத்துவமாகப் பேணவில்லை.சிங்கள-பௌத்த அச்சாணியில் சுழல்கின்ற சக்கரமாக அரச பொறிமுறைகள் அரசதுறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.சிறுபான்மை சமூகங்களைப் பாரபட்சமாக நடாத்தும் செற்பாடுகள் அன்றும் இன்றும் காணப்படுகின்றன.

என முன்னாள் மட்டக்களப்பு. ஜி.ஶ்ரீநேசன் ,வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் வெளியீட்டுள்ள ஊடக அறிக்கையில்

பேரினவாத அதிகார வர்க்கத்தின் வேட்கை அல்லது இலக்கு என்பது இந்த நாட்டினைச் சிங்கள பௌத்த அரசாக நிறுவிக்காட்டுவதேயாகும்.ஒரே நாடு,ஒரே சட்டம்,ஒரே இனம் என்ற உச்சரிப்புகள்,கோசங்கள் யாவும் மேற்கூறிய நிறுவலுக்கான அடிப்படை எண்ணக்கருக்களாகும்.

அதாவது இனவாதம்,மதவாதம் என்கின்ற பிற்போக்குவாதத் தண்டவாளங்களில்
பயணிக்கும் பழைய கரிக்கோச்சியாகவே அரசு நகர்கின்றது.இன மத சார்பற்ற தண்டவாளங்களில் பயணிக்கத்தக்க நவீன புகையிரதமாக இந்த அரசு மாற விரும்பவில்லை.
சிங்கள பௌத்தர்களுக்கு இனிப்பை ஊட்டுவதற்காக,தமிழ் பேசும் மக்களுக்குக் கசப்புகளை ஊட்டுவதிலேயே அரசு கவனம் செலுத்துகிறது.இவ்வாறு ஊட்டிய இனிப்புகள்தான் பேரின அடிப்படைவாதமாக நாட்டையும் மக்களையும் பல்லாண்டுகளாக ஆட்டிப்படைத்து வந்துள்ளது.

பேரினவாதிகள் தேர்தலில் வாக்கு வேட்டையாடுவதற்காக அரசியல் சதுரங்கத்தில் சிறுபான்மை மக்களைப் பகடைக்காய்களாக உருட்டி விளையாடி வருகின்றார்கள்.
காலாகாலாமாகப் பேரினவாத அரசாங்கங்கள் பின்பற்றிய பிற்போக்கான பாதையில் பின்னோக்கிப் பயண்ணிப்பதிலே இன்றைய பொதுஜனப்பெரமுன அரசாங்கம் ஈடுபடுகின்றது.அந்தவகையில் தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான பலவேறு வேட்டைகள்,செயற்பாடுகள் நடைபெறுகின்றன.

நிலவேட்டை-
மயிலத்தமடு,மாதவணை மேய்ச்சல்தரை அபகரிக்கப்பட்டு,அயல்மாகாண சிங்களமக்களுக்குச் சோழச்செய்கை என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகின்றன.தொல்லியல் இடங்கள் என்ற போர்வையில் பல தொன்மையான தமிழ் பேசுனரின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன.

அடிப்படை உரிமைகள் மீதான கட்டுப்பாடு;

இறந்த உறவுகளைப் பொதுவிடங்களில் நினைவு கொள்வதற்கான உரிமை மறுக்கப்படுகின்றன.
தமிழ் பேசும் முஸ்லிங்களின் இறந்த உடலங்களை அவர்களின் பண்பாடுகளுக்கு அமைவாக நல்லடக்கம் செயவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது.வைரஸ் தொடர்பான சிரேஷ்ட வைத்திய நிபுணர் பேராசிரியர் மலித்பீரிஸ்,பலிகவடன என்போர் நிலத்தில் சடலங்களைப் புதைப்பதால் வைரஸ் பரவ வாய்ப்பில்லை என உறுதிப்படுத்தியுள்ளனர்.அவ்வாறிருந்தும் அரசு செவிசாய்க்கவில்லை.

தமிழர்களின் இறந்த உடலங்கள் புதைக்கப்பட்ட சமாதிகள் உள்ள மயானங்கள் சில இராணுவ,அதிரடிப்படை முகாம்களாகவுள்ளன.அம்முகாம்களில் இருந்து அப்படைகள் விரைவில் வெளியேறும் எனக் கடந்த அரசாங்கம் கூறியது.இந்த அரசாங்கம் அவ்விடயம் தொடர்பாக அக்கறை காட்டவில்லை.

100,000 பேருக்கான தொழில் வாய்ப்பு-

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாகப் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பிரதேச செயலக ரீதியாக GCE O/L,A/L இல்லாத வறுமைக் கோட்டின் கீழுள்ள இளைஞர்,யுவதிகளுக்குத் தொழில்வாய்ப்பை வழங்குவதற்காக நேர்முகப்பரீட்சை நடைபெற்றது.அதில் முறையாகப் புள்ளிகள் வழங்கப்பட்டிருந்தன.ஆனால்,தேர்தலின் பின்னர்,தொழில் வழங்கும்போது ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பட்டியல் கவனத்திற்கொள்ளப்படவில்லை என்பதைப் பாதிக்கபட்டவர்கள் கூறி வருகின்றனர்.குடும்பஸ்தர்கள்,விதவைகள் கூட ஏமாற்றமடைந்துள்ளனர் இரண்டாவது பட்டியலாவது ஏமாற்றாமல் இருக்குமா? என்பதுதான் இவர்களது கேள்வியாகும்.

புதிய அரசாங்கம் 1972,1956 களை நோக்கிப் பிற்போக்குப் பாதையில் நகர்ந்தால் அது நாட்டிற்கும்,மக்களுக்கும் நன்மைகளைத் தரவே தராது.உலகநாடுகள் கொரோணாவுக்கு மருந்தைத் தேடுகிறது.நமது நாட்டில் தொல்லியல் தேடல், சோழச்செய்கை என்ற பெயர்களில் மேற்கொள்ளும் நிலக்கபளீகரம் மீண்டும் இனமுரண்பாட்டைத் தேடுகிறதாகத் தெரிகிறது.அரசதரப்புத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்,அமைச்சர்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.