காளியம்மன் பற்றிப் பேசுவதை நிறுத்தவேண்டும் – மனோ எம்.பி. வலியுறுத்து

கொரொனாவுக்குப் ‘பாணி மருந்து’ கண்டு பிடித்துள்ளார் என்று அரசின் சில அமைச்சர்களால் மகிமைப்படுத்தப்பட்டு ஓடித்திரியும் ‘பாணி தம்மிக’ என்ற நாட்டு வைத்தியரை சில தேரர்கள், ‘தேசிய மோசடிக்காரன்’ என்கிறார்கள். சிலர், ‘தேசிய வீரன்’ என்கிறார்கள். எனக்கு இதில் அக்கறை இல்லை. ஆனால், இவர் இந்துக் கடவுளான காளியம்மன் பற்றிப் பேசுவதை உடன் நிறுத்த வேண்டும்.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது:-

“நான் இந்த நாட்டு வைத்தியரின் பாணி மருந்தை இதுவரை குடிக்கவில்லை. இனிமேல் குடிக்கும் எண்ணமும் இல்லை.

எங்கள் வீட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இதுவரை வராமைக்குக் காரணம், எங்க வீட்டு ‘சித்த வைத்திய’ பானங்கள்தான். இவை நாம் எப்போதும் பாரம்பரியமாக எங்கள் பூட்டன், பூட்டி காலத்திலிருந்து பின்பற்றி வரும் இயற்கை மருந்து பானங்கள்.

இங்கே எனது பிரச்சினை என்னவென்றால், இந்தப் ‘பாணி தம்மிக’ என்ற நாட்டு வைத்தியர், தனக்குத் துணையாக ‘காளியம்மனை’ அழைத்துள்ளதாகும். இவர் தனக்குக் காளியம்மன் அருள் பாலித்திருக்கின்றார் எனக் கூற, இவரை எதிர்ப்போர் காளியம்மனையும் சேர்த்து விமர்சிக்கின்றார்கள். இது நிறுத்தப்பட வேண்டும். காளியம்மன், பார்வதி தேவையின் ஓர் அவதாரம். பார்வதி, இந்துக்களின் மூத்த தாய்க் கடவுள்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.