குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக சமூகத்தை அடகு வைக்கும் அரசியல் தலைமைகளை மலையக மக்கள் புறக்கணிக்க வேண்டும் – மாஸ்க் பிரபாகர் தெரிவிப்பு
குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக சமூகத்தை அடகு வைக்கும் அரசியல் தலைமைகளை மலையக மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்று தோட்ட தொழிலாளர்கள் மத்திய நிலையத்தின் இணை அமைப்பாளர் மாஸ்க் பிரபாகர் தெரிவித்தார்.
அத்துடன், எதிர்வரும் ஜனவரியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படாவிட்டால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, தோட்ட தொழிலாளர்கள் மத்திய நிலையம் ஆகியன இணைந்து நுவரெலியாவில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு எச்சரித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை 2014 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டது. அதன்பின்னர் இந்நாட்டில் 2 ஜனாதிபதி தேர்தல்கள், 2 பொதுத்தேர்தல்கள், ஒரு உள்ளாட்சிமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அப்போதெல்லாம் ஆயிரம் ரூபா கோஷம் எழுந்தது. எனினும், ஆட்சியாளர்களும், தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை .தேர்தல் காலங்களில் திட்டமிட்ட அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டனர்.
ஆயிரம் ரூபா தொடர்பில் அரசாங்கம் அறிவிப்புகளை மட்டும் விடுத்து பயன் இல்லை. தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச வேதனைமாக தொகையொன்றை நிர்ணயிக்கும் சட்டம் பாராளுமன்றத்தில் இயற்றப்படவேண்டும். அப்போதுதான் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம். அதனைவிடுத்து ஊடக அறிவிப்புகளை விடுப்பதில் எவ்வித பலனும் இல்லை.
அதேபோல் குறுகிய அரசியல் தேவைகளுக்காக தோட்டத் தொழிலாளர்களை அடகுவைக்கும் – காட்டுக்கொடுக்கும் தலைமைகளை மக்கள் புறக்கணிக்கவேண்டும். கட்சி, தொழிற்சங்க பேதமின்றி சமூக நீதிக்காகவும், மக்களுக்காகவும் குரல் கொடுக்கும் எங்களுடன் இணையவேண்டும். அப்போதுதான் மாற்றத்தை நோக்கி பயணிக்கலாம்.
கூட்டு ஒப்பந்தம் ஜனவரியில் கைச்சாத்திடப்படுமானால் அதற்கான பேச்சுவார்த்தை முன்கூட்டியே ஆரம்பித்திருக்கவேண்டும். அவ்வாறு இன்னும் நடைபெறவில்லை. எதுஎப்படியிருந்தாலும் ஜனவரியில் ஆயிரம் ரூபா வழங்கப்படாவிட்டால் இம்முறை பாரிய போராட்டங்கள் வெடிக்கும். அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. கொரோனா வைரஸ் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றோம். உரிய சுகாதார ஏற்பாடுகளுடன் போராட்டம் முன்னெடுக்கப்படும்.” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை