திருகோணமலையில் 3கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில்!

திருகோணமலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 21 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் மருத்துவர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தை தொடர்ந்து திருமலை நகரில் முருகாபுரி, ஜின்னானகர், அபயபுரம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைவாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (21) திருகோணமலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “உத்தியோகபூர்வமான அறிவிப்பு வரும்வரை, குறித்த பகுதியின் சுகாதார வைத்திய அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் அதிகாரங்களின் அடிப்படையில் அப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 21 கொவிட்- 19 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதில் 6 பாடசாலை மாணவர்கள் உள்ளடங்குவதால், அவர்கள் சம்பந்தப்பட்ட பாடசாலைகளுடன் சம்பந்தப்பட்டவர்களை சுய தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை சுகாதார பரிசோதகர் பிரிவு ஜமாலியா பிரதேசத்தில் 14 தொற்றாளர்களும், துளசிபுரம் பகுதியில் ஒருவரும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேருமாக இவ்வாறு 21 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

பேலியகொட மீன் சந்தை கொத்தணி மூலமாக இதுவரை கிழக்கு மாகாணத்தில் 778 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதிலே திருகோணமலை மாவட்டத்தில் 40 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 102 பேரும் அம்பாறையில் 23 பேரும் கல்முனை பிராந்தியத்தில் 613 தொற்றாளர்களும் அடையாளங் காணப்பட்டுள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.