மட்டக்களப்பில் சோளன் பயிர் செய்கையில் 738 கெக்டேயர் நிலப்பரப்பில் படைப்புழு தாக்கம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை செய்கை பண்ணப்பட்டுள்ள சோளன் பயிர்களில் சுமார் 738 கெக்டேயர் நிலப்பரப்பில் படைப்புழு தாக்கத்தின் பரவல் காணப்படுவதாக மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் வீ.பேரின்பராஜா தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்தார்.

இதனைக் கட்டுப்படுத்த விவசாய திணைக்களம் களத்தில் நின்று துரித நடவடிக்கை எடுத்துவருகின்றது.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் இம்முறை பெரும்போக விவசாயத்தின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 1500 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோளன் பயிற்செய்கை மேற்கொள்வதற்கான இலக்கைக் கொண்டு விவசாய நவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த டிசம்பர் 15 வரையான காலப்பகுதியில் 1214 ஹெக்டேயர் சோளன் விவசாயிகளால் செய்கை பண்ணப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் 738 ஹெக்டேயர் நிலப்பரப்பில் படைப்புழு தாக்கத்திற்கான பரவல்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 40 தொடக்கம் 61 வீதமான தாக்கங்கள் இலைகளிலும், பூக்களிலும் அவதானிக்கப்பட்டுள்ளன.

இவற்றைக் கட்டுபடுத்துவதற்கான ஒருங்கிணைந்த பீடைமுகாமைத்துவத் திட்டம், இயற்கை முறை மற்றும் இரசாயன கிருமி நாசினி விசிறல் போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் விவசாய விரிவாக்கல் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

மேலும் விவசாயத் திணைக்களத்தினால் இந்நோயினைக் கட்டுப்படுத்துவதற்காக பௌலிஜன் எனும் திரவம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்