இந்த நாட்டின் பொருளாதாரம், சுதந்திரம், வளர்ச்சியில் முஸ்லிங்களின் பங்கு அளப்பரியது : சட்டத்தரணி ஹாதி இஸ்மாயில்…

நூருல் ஹுதா உமர்

ஆயிரக்கணக்கான வருட கால வரலாற்றைக் கொண்ட 9.7%மான முஸ்லிம்கள் இந்நாட்டு பிரஜைகள் என்ற வகையில் வரலாற்று நெடுகிலும் பல்லின, பல கலாச்சார மதங்களை பின்பற்றுகின்ற சகலருடனும் சமாதான சகவாழ்வை பேணி கரைந்து போகாமலும் கரைந்து வாழ நிர்ப்பந்திக்கப்படாமலும் தனித்துவத்தை பாதுகாத்து வாழ்ந்து வந்துள்ளனர். ஆசிய நாடுகளில் பெரும்பான்மை மக்களுடன் இரண்டரக்கலந்து தனித்துவத்தை இழக்கும் நிலை உருவாகியது போன்று இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்படவில்லை என மாற்றத்திற்கான முன்னணியின் செயற்பாட்டாளர் சட்டத்தரணி ஹாதி இஸ்மாயில்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும்

அரசியலில் பங்கேற்பு, பாராளுமன்ற பிரநிதித்துவம், பெரும்பான்மை அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படல், நாட்டின் சுதந்திரம், வளர்ச்சி, முன்னேற்றம் போன்ற  விடயங்களில் முஸ்லிம்களின் வகிபங்கு முக்கியமானது. இலங்கை அரசியலமைப்பின்  உறுப்புரை 10-சிந்தனை செய்யும், மனச்சாட்சியை பின்பற்றும், மத சுதந்திரம் என்பவற்றிற்கு உரித்துடையவர்கள். உறுப்புரை 12(1)- சகலரும் சட்டத்தின் முன் சமமாக பாதுகாக்கப்பட உரித்துடையவர்கள். உறுப்புரை 12(2)- இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியல், கொள்கை அல்லது பிறப்பிடம் காரணமாக எத்தகைய ஒரு நபரும் ஓரங்கட்டபடல் ஆகாது. உறுப்புரை 14- பேச்சு,ஒன்று சேர்தல், தொழிற்சங்கம், போதனைகளில் ஈடுபடல், உயர் தொழில் வியாபாரம், இலங்கை முழுவதும் நடமாடுவதற்கு, விரும்பிய இடத்தில் வசிப்பதற்கு, இலங்கைக்கு திரும்பி வருவதற்குமான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி உரிமைகளுடன் மற்றவர்களின் மதங்களை இழிவு படுத்தல், பொய் பிரச்சாரம் செய்தல் தண்டனைக்குரிய குற்றங்களாக கருதப்படும் ஏற்பாடுகள் காணப்படுகிறது. இவ்வாறான அரசியலமைப்பு உரிமைகளினூடாகவே முஸ்லிம்களால் தமது தாய் நாட்டில் வரலாறு நெடுகிலும் தமது மார்க்க அடையாளங்களுடன் பெரும்பான்மை சமூகத்தினரோடும் ஏனைய சிறுபான்மை இனங்களோடும் சமாதானமாகவும் இணக்கமாகவும் வாழ்ந்து வருகின்றனர்

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் பிரித்தானியர்களின் ஆட்சிகளில் அரசியல், பொருளாதாரம்,சமயம் பண்பாடு ஆகியன வீழ்ச்சி கண்டிருந்ததனாலும், இந்நாட்டு மக்களை அடிமைகளாக நடாத்தியதனாலும் 18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளில் சிந்தனையாளர்கள், விவேகிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் சீர்திருத்தவாதிகள் போன்றோர் பல தியாகம் செய்து நாட்டை விடுவிக்க முயற்சி செய்தனர் .

டி.எஸ். சேனநாயக்கா, பொன்னம்பலம், டி.பி. ஜாயா,  சேர் ராசிக் பரீட் போன்றோர் சுதந்திரத்திற்கு போராடியவர்கள். முஸ்லிம்கள் இந்நாட்டுக்கு விசுவாசமாகவும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் வகையிலும் செயற்பட்டு வந்துள்ளனர். புரட்சியோ கிளர்ச்சியோ செய்யாத ஒரு சமூகம் நாட்டின் பிரதான நீரோட்டத்தில் சங்கமித்து நாட்டின் பிரிக்க முடியாத ஓர் அங்கமாக மாறி அதன் முன்னேற்றத்திற்கும் துறைசார்ந்த பங்களிப்புக்களை அன்று முதல் வழங்கி வருகின்றமை நல்லிணக்க வாழ்வை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டுகின்றது.

போர்த்துக்கேயரை விரட்டியடிக்க மாயாதுன்னை முஸ்லிம்களையே கள்ளிக்கோட்டைக்கு அனுப்பி வைத்தமை, போர்த்துக்கேயரை வெற்றி கொள்வதற்காக கண்டி அரசனோடு போராடிய முஸ்லிம்களுக்கு கண்டி பிரதேசத்தில் காணிகளை மன்னன் வழங்கியமை, கண்டி மன்னன் ஒல்லாந்தரை துரத்திவிரட்ட உஸ்மான் லெப்பை மௌலா முகாந்திரம் என்பவரை கர்நாடக நவாப் முகம்மது அலியிடம் தூதனுப்பியமை,
ஆங்கிலேயர் சுதந்திரம் வழங்குவதற்கு 2 சிறுபான்மை இனங்களும் ஆதரிக்க வேண்டும் என நிபந்தனை விதித்தபோது ரி.பி.ஜாயா,  டாக்டர் கலீல்  போன்றவர்கள் “முதலில் எமக்கு சுதந்திரத்தை தாருங்கள் அதன் பிறகு எமது பிரச்சினைகளை நாட்டுக்குள் பேசித்தீர்த்துக் கொள்கிறோம்” என தெரிவித்தமை என்பன முஸ்லிங்களின் தணியாத சுதந்திர உணர்வுக்கும் தேசப்பற்றுக்கும் மிகச்சிறந்த சான்றுகளாகும்.

இது தொடர்பில் எஸ்.டவலியு. ஆர்.டீ  பண்டாரநாயக்கா “எந்த நிபந்தனையும் இல்லாமல் நாட்டின் சுதந்திரத்திற்கு முழுமையாக ஆதரித்தவர்கள் இந்நாட்டு முஸ்லிம் சமூகத்தினர்” என்று குறிப்பிட்டிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.