கட்சித் தலைமையை விமர்சிக்கும் சுமந்திரனுக்கு இன்று உரிய பதில் – மாவை சேனாதிராஜா

கட்சிக்குள் பேச வேண்டிய விடயங்களைத் தொடர்ந்து சுமந்திரன் பகிரங்கமாகப் பேசி வருகிறார். இரண்டாவது முறை கட்சித் தலைமைக்கு எதிராக அவர் பகிரங்க அறிக்கை விடுத்துள்ளார். இது மிகவும் பிழையானது. சுமந்திரனின் கடிதம் தொடர்பில் இன்று உரிய முறையில் பதில் வழங்குவேன்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தன்னிச்சையான, ஜனநாயக விரோத, சட்டவிரோதமான மாவை சேனாதிராஜாவின் செயற்பாட்டினால்தான் யாழ். மாநகர சபையை இழந்தோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் கடிதம் ஒன்றையும் மாவைக்கு நேற்று அவர் அனுப்பிவைத்துள்ளார்.

அந்தக் கடிதம் தொடர்பில் வினவியபோதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எம்.ஏ.சுமந்திரனிடமிருந்து மின்னஞ்சலில் கடிதமொன்று வந்துள்ளது என எனக்குச் சொல்லப்பட்டுள்ளது. இன்னும் அதை நான் படிக்கவில்லை. ஊடகங்கள் தரப்பிலிருந்து விசாரித்ததில் சில உள்ளடக்கங்களை அறிந்துள்ளேன்.

கட்சியின் உள்ளக விடயங்கள், உள்ளுக்குள்ளேயே பேசப்பட வேண்டியவை. அந்த ஒழுக்கத்தை நான் பின்பற்றுகின்றேன். ஆனால், சுமந்திரன் கட்சி தலைமைக்கு எதிராக இரண்டாவது முறையாகப் பகிரங்கமாக அறிக்கை விடுத்துள்ளார். அது தவறானது. கட்சி நடவடிக்கைக்குரியது.

நாமும் பேசுவதெனில் பலதைப் பேசலாம். ஆனால், நாம் பொறுப்பான அரசியல்வாதிகள். அதனால் இன்று காலை கட்சிக்குள் இது பற்றி ஆலோசித்து, பதிலளிக்கத்தக்க விடயம் என்றால் உரிய முறையில் பதிலளிப்பேன்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.