ஆனோல்ட்டை பரிந்துரைத்தமை என் தனிப்பட்ட முடிவு கிடையாது – மாவை தன்னிலை விளக்கம்…

“யாழ். மாநகர சபையின் மேயராக மீண்டும் இம்மானுவேல் ஆனோல்ட்டையே சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் விரும்பினார்கள். அவர்கள் வேறு எவரின் பெயரையும் என்னிடம் பிரேரிக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களில் 15 உறுப்பினர்கள் நேற்று ஆனோல்ட்டுக்கு ஆதரவாக வாக்களித்தமையிலிருந்து இந்த உண்மைத்தன்மையை அனைவரும் அறிந்துகொள்ள முடியும். எனவே, சபை உறுப்பினர்களின் விருப்பத்துக்கமையவே ஆனோல்ட்டை மேயர் தெரிவுக்குப் பரிந்துரைத்தேன். நான் தன்னிச்சையான முடிவு எதையும் எடுக்கவில்லை. கட்சியின் கொள்கையை மீறி ஜனநாயக விரோத – சட்டவிரோத செயற்பாட்டில் நான் ஈடுபடவில்லை.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் புதிய மேயரைத் தெரிவு செய்வதற்காக நேற்று நடத்தப்பட்ட பகிரங்க வாக்கெடுப்பில் கூட்டமைப்பின் போட்டியாளர் இம்மானுவேல் ஆனோல்ட்டைத் (20 வாக்குகள்) தோற்கடித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் (21 வாக்குகள்) ஒரு மேலதிக வாக்கால் வெற்றி பெற்றுள்ளார். இது தொடர்பில் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. அது குறித்து கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ். மாநகர சபையின் மேயரைத் தெரிவு செய்வது அங்கு அங்கம் வகிக்கும் உறுப்பினர்களே. உறுப்பினர்கள் ஆனோல்ட்டை விரும்பும்போது அதற்கு மாறாக வேறொருவரின் பெயரை நான் பிரேரிக்க முடியாது.

மேயர் தெரிவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேசியிருந்தேன். இந்த விடயத்தில் பக்குவமாக நடக்குமாறு அவர் என்னிடம் தெரிவித்திருந்தார். இதேவேளை, சொலமன் சிறிலை மேயர் வேட்பாளராகக் களமிறக்குமாறு தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட இரு  நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பினார்கள். அவர்களின் விருப்பம் என்னிடம் நேரடியாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மேயர் தெரிவு தொடர்பில் இரண்டு தடவைகள் நடைபெற்ற கூட்டங்களில் யாழ். மாநகர சபையின் உறுப்பினர்கள் எவரும் சொலமன் சிறிலை விரும்பவில்லை. அவரின் பெயரை உறுப்பினர்கள் எவரும் என்னிடம் பிரேரிக்கவில்லை.

கூட்டமைப்பின் மேயர் வேட்பாளருக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) ஆகிய கட்சிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தேன். எமது தரப்பினரும் அந்த இரு கட்சிகளிடம் நேரில் பேசினார்கள். ஆனால், அந்தக் கட்சியினர் எவரும் நம்பத் தகுந்த வகையில் – உருப்படியான பதில் எதையும் வழங்கவில்லை.

நான் வேறு வேட்பாளரை மேயராகக் களமிறக்கியிருந்தால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியிருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து நீக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் மணிவண்ணன் நேற்று மேயராகக் களமிறங்கியபோது அந்தக் கட்சியைச் சேர்ந்த 10 பேர் கட்சியின் தலைமையின் உத்தரவை மீறி அவருக்கு ஆதரவு வழங்கியிருக்கின்றார்கள். இந்தநிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களை நாம் எப்படி நம்புவது ? அதேவேளை, ஈ.பி.டி.பியினர் மீதும் எமக்கு நம்பிக்கை இருக்கவில்லை.

எமது கட்சியின் மேயர் தெரிவுக்கான பரிந்துரைக்கமைவாக ஆனோல்ட்டுக்கு கூட்டமைப்பின் சார்பில் 15 பேர் ஆதரவாக வாக்களித்தனர். ஏனைய கட்சிகளைச் சேர்ந்த 5 பேரும் வாக்களித்தனர். எமது கட்சியைச் சார்ந்த ஒருவர் மட்டும் எதிர்பார்ப்புக்கு மாறாக நடுநிலை வகித்திருந்தார். அதனால் ஒரு வாக்கால் ஆனோல்ட் தோற்றார். நடுநிலை வகித்த உறுப்பினர் ஆனோல்ட்டுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால் ஆனோல்ட்டும் மணிவண்ணனும் சரிசம வாக்குகளைப் பெற்றிருப்பார்கள். குலுக்கல் முறையில் ஆனோல்ட்டுக்கு வெற்றி வாய்ப்பும் கிடைத்திருக்கும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.