திருகோணமலையில் 10 பேருக்கு தொற்று உறுதி!

திருகோணமலை மாவட்டத்தில்  2021ஜனவரி முதலாம் திகதி மாத்திரம்  10 கொரோனா தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தில் இன்று (01) பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 நபர்களும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 நபர்களும் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1 நபருமாக 10 தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 28ஆம் திகதி பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 5
பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள்  முன்னைய பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் சம்பந்தப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்  எனவும் தெரியவருகின்றது.
இதேவேளை திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் கடந்த 29 ஆம் திகதி 17 பேருக்கு பிஸியா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட  நிலையில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்நபர் நகர் பகுதியில் உள்ள கடை ஒன்றில்  வேலை செய்து வருபவர் எனவும் தெரியவருகின்றது.
2021 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலிருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சத்திர சிகிச்சைக்காக வந்த 54  வயதுடைய நபரொருவருக்கு அன்டிஜென் பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென்  பரிசோதனையின் மூலம் 03 பேர்  நகர்ப் பகுதிகளில் உள்ள கடைகளில் வேலை செய்பவர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும், இதுவரை திருகோணமலை மாவட்டத்தின் 127 கொவிட் 19 தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர் மூதூரில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு முகக் கவசம் அணியாமல் வருகை தந்ததாகவும் பொதுமக்கள் முகக் கவசங்களை கட்டாயமாக அணிந்து பொது போக்குவரத்தில் பயணிக்குமாறும், பொது இடங்களில் முகக் கவசங்கள் அணியாமல் செல்வதை தவிர்க்குமாறும் சுகாதார வழிமுறைகளை  பின்பற்றுமாறும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.