சாய்ந்தமருதில் மேலும் 11 பேருக்கு கொரோனா; மொத்த எண்ணிக்கை 48 ஆக அதிகரிப்பு

 

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இப்பிரதேசத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்திருப்பதாக சாய்ந்தமருது பிரதேச மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் தெரிவித்தார்.

இப்பிரதேசத்தில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் தொற்று பதிவாகியிருப்பது இதுவே முதல் சந்தர்ப்பமாகும் என்ற போதிலும் இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்புடைய குடும்ப உறவினர்களாவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

ஏலவே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் 50 பேரிடம் கடந்த 30ஆம் திகதி பி.சி.ஆர். மாதிரிகள் பெறப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை (02) மாலை கிடைக்கப்பெற்ற முடிவுகளின் பிரகாரம் மேற்படி 11 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவர்கள் கொவிட்-19 சிகிச்சை வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவர்களது குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன் அவர்களுக்கும் தொடர்புடையவர்களுக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

சாய்ந்தமருது பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு, கொவிட்-19 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 22 பேர் பூரண சுகம்பெற்று வீடு திரும்பியுள்ளனர். இன்னும் 26 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் மரணித்துள்ளார்.

இப்பிரதேசத்தில் சனிக்கிழமை (03) வரை மொத்தமாக 842 பேருக்கு பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தற்போது 201 பேர் தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தொடர்ந்தும் இப்பிரதேசத்தில் பி.சி.ஆர். மற்றும் ரெபிட் அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சாய்ந்தமருது மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை இப்பிரதேசத்தில் கொவிட்-19 தடுப்பு செயற்பாடுகளை இறுக்கமாக அமுல்படுத்துவதற்கு சுகாதாரத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடித்து, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகள் மூலம் தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.