5 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பம்

சுபீட்சத்தின் தொலைநோக்கு வேலைத்திட்டத்தின் கீழ், நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கான 5,000 வீடுகளில், 3,000 வீடுகளை அமைக்கும் பூர்வாங்கப்பணிகள் இன்று (04)ஒறுகொடவத்தையில் ஆரம்பமாகின்றன.

நிரந்தர குடியிருப்பு வசதிகள் இல்லாத நடுத்தர வர்க்க குடும்பங்களின் தேவைகளை அறிந்து, வீடுகளை நிர்மாணிக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன்கீழ், மூவாயிரம் வீடுகளை அமைப்பதற்காக 40 பில்லியன் ரூபா செலவிடப்படும். இல்லற பந்தத்தில் இணையும் தம்பதிகளின் இல்லக் கனவை நனவாக்கும் வகையில் வீடுகள் அமைக்கப்படவுள்ளன. தொழிற்றுறை சார்ந்த இளம் வயதினர், மருத்துவர்கள். ஆசிரியர்கள், வங்கி உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு அனுகூலம் தரும் வகையில் திட்டம் அமுலாகவுள்ளது.

வீடுகளை நிர்மாணிக்க கொழும்பு, கண்டி, கம்பஹா உள்ளிட்ட பிரதான நகரங்களில் காணிகள் இனங்காணப்பட்டுள்ளன. கொழும்பில் ஒறுகொடவத்த தவிர, புளுமெண்டால், மாலபே, மாக்கும்புர, பொரலஸ்கமுவ ஆகிய இடங்களிலும் வீடுகள் நிர்மாணிக்கப்படும்.

இந்த வீடமைப்புத் திட்டம் ஒன்றரை வருடத்திற்குள் பூர்த்தியாகவுள்ளது. இதில் உள்ள வீடுகளின் விற்பனை விலையைத் தீர்மானிக்கையில் காணிகளின் பெறுமதி உள்ளடக்கப்பட மாட்டாது. இது பயனாளிகளுக்குப் பெரும் அனுகூலம் தருவதாக அமையும். வீடுகளை வாங்குவதற்கு 6.25 சதவீத வட்டிவீதத்தில் கடன் வசதிகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்