வல்வெட்டித்துறை மீனவர் மீது இந்திய மீனவர்கள் அராஜகம்!

வல்வெட்டித்துறை ஆதிகோயிலடியில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர் மீது இந்திய மீனவர்கள் வாள் முனையில் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறையில் இருந்து நேற்று மீன்பிடிக்கப் புறப்பட்ட அப்புலிங்கம் அமிர்தலிங்கம் (வயது 46) என்ற மீனவர் இலங்கைக் கரையில் இருந்து 11 மைல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளை அப்பகுதிக்கு வந்த 3 இந்தியப் படகுகள் மீனவரின் படகைச் சுற்றிவளைத்துள்ளது. இதன்போது இரு  படகுகள் பாதுகாப்பு வழங்க மற்றைய படகில் இருந்த 4  இந்திய மீனவர்களில் மூவர் இலங்கை மீனவரின் படகில் ஏறி குறித்த மீனவரின் கழுத்தில் வாள் வைத்து அச்சுறுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று பாதிக்கப்பட்ட மீனவர் முறைப்பாடு செய்துள்ளார்.

அத்துடன் இலங்கை மீனவரின் படகில் இருந்த மீன்கள் அனைத்தும் பறிமுதல் செய்ததுடன் ஜி.பி.எஸ் கருவியையும் பறித்து எடுத்துச் சென்றுள்ளதுடன்
யையும் பறித்து கடலில் வீசியுள்ளனர். அதேவேளை, படகின் இயந்திரத்தையும் அடித்து உடைத்துள்ளனர் என்றும் பாதிக்கப்பட்ட மீனவர் தெரிவித்துள்ளார்.

அடிகாயங்களுக்கு இலக்கான இலங்கை மீனவர் கரை திரும்பி வல்வெட்டித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அதன்பின்னர் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் .

இந்த விடயங்கள் தொடர்பில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என வடமராட்சி மீனவர் சங்க சமாசத் தலைவர் வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.

அத்துடன் இந்த அராஜக சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை உதவிப் பணிப்பாளருக்கு வடமராட்சி மீனவர் சங்கம் எழுத்தில் முறையிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.