அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோட்டாஅரசிற்கும், மனித உரிமை ஆணையகத்திடமும் பகிரங்க கோரிக்கை மனு அனுப்பிவைப்பு…

அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின்
வடக்கு கிழக்கு வாழ் பொதுமக்களின் சார்பாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்தராஜபக்ச, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும்,
இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் ஆகியோருக்கு கோரிக்கை மகஜர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி 05.01.2021 இன்றையநாள் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தின் முன்பாக, சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனம் (எக்டோ) அமைப்பின் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தினைத் தொடர்ந்தே அரசதலைவர், பிரதமர், அமைச்சர்கள், மனிதஉரிமை ஆணையகம் போன்றோருக்கு குறித்த கோரிக்கை மகஜர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

மேலும் குறித்த மகஜர்களில்,

மேதகு ஜனாதிபதி அவர்களே!
கோவிட் – 19 பெருந்தொற்றின் அபாயத்திலிருந்து தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களைப் பாதுகாப்பதன் நிமித்தம் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும்
உடனடியாக விடுதலை செய்க.

தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின்
வடக்கு கிழக்கு வாழ் பொதுமக்கள் ஆகிய நாம் எமது மேற்படி கோரிக்கையை இத்தாழ் தங்கள்
முன் சமர்ப்பிக்கிறோம்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட எமது குடும்ப உறுப்பினர்கள் இலங்கையின்
பல்வேறு சிறைகளிலும் பல்லாண்டுகாலமாக சிறைவைக்கப் பட்டிருக்கிறார்கள்.

அவர்களில் சிலர்
தமது வாழ்வை இரும்புக் கம்பிகளின் பின்னாலேயே பல ஆண்டுகளாகக் கழித்து மூப்படைந்துள்ளதோடு உடல் இயலாமைக்கும் உள்ளாகியுள்ளனர். தற்போது 147 தமிழ் அரசியல்
கைதிகள் சிறைகளில் உள்ளனர்.

இவர்களுள் 69 பேருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 61 பேருக்கு வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இவர்களில் 7 பேர் பெண்களாவர். ஒருபெண் ஒன்றரை
வயது குழந்தையுடன் உள்ளார்.

சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்
அண்மையில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் யாரும் இன்னும் நீதிமன்றத்தின்
முன் சமர்ப்பிக்கப்படவில்லை. இவர்களுள் பதின்ம வயதினரும் அடங்குவர்.

சிறைச்சாலைகளில் தற்போது கோவிட் – 19 பெருந்தொற்று பரவுவதன் காரணமாக தமிழ் அரசியல்
கைதிகளின் ஆரோக்கியம் மற்றும்  பாதுகாப்பு குறித்து அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நாட்டின்
வடக்கு கிழக்கு வாழ் சமூகத்தினரான நாம் பெரிதும் வருந்துகிறோம். 14வரையிலான தமிழ்
அரசியல் கைதிகள் வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுமுள்ளனர்.

இலங்கை அரசு 6000 சிறைக்
கைதிகளை விடுவித்திருப்பதையும் தகுதியான இன்னும் பல கைதிகளை படிப்படியாக விடுவிக்க
தீர்மானித்திருக்கும் அரசின் ஏற்பாட்டையும் நாம் வரவேற்கிறோம். மேதகு ஜனாதிபதியான
தாங்களும், இலங்கை அரசாங்கமும் தமிழ் அரசியல் கைதிகள் மீது கரிசணைகொண்டு அவர்களை
விடுவிப்பதன் மூலம் சிறைகளில் பரவிவரும் பெருந்தொற்றிலிருந்து அவர்களின் உயிரைப்
பாதுகாக்குமாறு கோருகிறோம்.

தண்டணைத் தீர்ப்பு விதிக்கப்பட்ட தழிழ் அரசியல் கைதிகள் பல வருடங்களை சிறையில்
கழித்திருப்பதோடு பல்லாண்டுகளாக வெளியுலகைக் காணாது இருக்கிறார்கள்.

அவர்களின் உடல்
உள ஆரோக்கியம் ஏற்கனவே வீழ்சியுற்றுள்ளது.

எஸ். மகேந்திரன் எனும் தமிழ் அரசியல் கைதி
1993 இல் தனது 17வது வயதில் கைதுசெய்யப்பட்டார்.

இவர் 26 வருடங்களை சிறையில்
கழித்துள்ள நிலையில் கடுஞ்சுகயீனம் காரணமாக தமது 45வது வயதில் இவ்வருடம் (2021) தைமாதம் முதலாம் திகதி மரணமடைந்தார்.

இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையம் சகவாழ்வையும் கட்டியெழுப்ப இலங்கை தன்னை
அர்ப்பணித்திருக்கும் நிலையில், முப்பதாண்டுகளுக்கும் மேலான யுத்தம் மற்றும் வன்முறைகளுக்கு
உள்ளான வடக்கு கிழக்கு தமிழ் சமூகம் அரசாங்கங்களிடம் நல்லிணக்கத்துக்கான சாதகமான
சமிக்ஞைகளை எதிர்பார்க்கிறது.

அரசியல் பொதுமன்னிப்பு என்பது நல்லிணக்கத்தின்
நுழைவாயிலாகும்.

அவ்வகையில், அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனையற்று விடுவிக்குமாறு தங்களிடம் பகிரங்கமாகக் கோருகிறோம் என குறித்த கோரிக்கைமகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசாரவிகரன், முல்லைத்தீவு பங்குத்தந்தை அருளானந்தம் ஜாவீஸ், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான சி.லோகேஸ்வரன், ம.தொம்மைப்பிள்ளை, க.விஜிந்தன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர், எஸ்.சத்தியசீலன், காணாமல் ஆக்கப்ட்டோரது உறவினர்கள், அரசியல் கைதிகளது உறவினர்கள், எக்டோ அமைப்பின் பிரதிநிகள் எனப் பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.