விக்டோரியா நீர்த்தேக்க பகுதியில் 100 மீட்டர் சுற்றாடலில் சுண்ணாம்பு அகழ்விற்கு தடை…

கண்டி மாவட்டத்தின் விக்டோரியா நீர்தேக்கத்தை அண்டிய பகுதிகளில் பதிவான நில அதிர்வு தொடர்பாக ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழுவின் அறிக்கை இன்று (05) சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த குழுவின் அறிக்கைக்கு அமைவாக பதிவான நில அதிர்வுகளினால் விக்டோரியா நீர்த்தேக்க அணைக்கட்டிற்கு கடுமையான பாதிப்புகள் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இன்று அமைச்சர் மஹிந்த அமரவீர ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தற்பொழுது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைவாக சிறிய அளவிலான அதிர்வினால் விக்டோரியா நீர்தேக்கத்திற்கு எந்தவித தாக்கமும் ஏற்படாது என்று குழு சுட்டிக்காட்டியுள்ளது. இதுதொடர்பாக எந்தவித அச்சமும் கொள்ள தேவையில்லை என்றும் அ மைச்சர் கூறினார்.

அத்துடன் விக்டோரிய அணைக்கட்டிற்கு அருகாமையில் சுண்ணாம்பு அகழ்விற்காக பயன்படுத்தப்படும் அகழ்வு நடவடிக்கை மீது கவனம் செலுத்தி, விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து 100 மீட்டர் வரையிலான பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற சுண்ணாம்பு அகழ்வு தடை செய்யப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

எனவே இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் புவி சரிதவியல் மற்றும் சுரங்க அகழ்வு பணியகத்திற்கு அமைச்சர் அறிவுறுத்தினார். இதைத் தவிர சுண்ணாம்பு அகழ்விற்காக பயன்படுத்தப்படும் அகழ்வு நடவடிக்கைகள் அங்கீகரிக்கப்பட்ட அளவில் மேற்கொள்ளப்படுகின்றனவா? என்பதை கண்டறிய வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.