ஹர்த்தால் போராட்டத்தை வெற்றியடையச் செய்யுங்கள்! – தமிழ்பேசும் மக்களிடம் சம்பந்தன், மனோ கூட்டாகக் கோரிக்கை



யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டமையைக் கண்டித்து தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு – கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்தப் போராட்டத்துக்கு சகல தமிழ்பேசும் மக்களும் தங்களால் முடியுமானளவு ஒத்துழைப்பை வழங்கி அதனை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ்பேசும் சமூகத்தை கிள்ளுக்கீரையாக நினைத்துப் பந்தாட நினைக்கும் கோட்டாபாய அரசுக்கு சரியான பதிலடியை இந்தப் போராட்டத்தின் ஊடாக வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-

“பௌத்த சிங்கள மக்களின் ஆதரவுடன் ஆட்சிப்பீடம் ஏறினோம் என வீரவசனம் பேசிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரச தரப்பினரும் இன்று அம்மக்களின் ஆதரவை இழந்து வருகின்றனர்.

உலகத்தில் வெறுக்கத்தக்க ஜனாதிபதியாகவும் அரசாகவும் இந்த ஆட்சி ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. இந்தநிலையில் பௌத்த சிங்கள மக்களின் மனதை வெல்வதற்காகத் தமிழ் பேசும் மக்கள் மீதும், அவர்களின் உரிமைகள் மீதும், அவர்களின் அடையாளச் சின்னங்கள் மீதும் இந்த அரசு கைவைக்கத் தொடங்கியுள்ளது.

யாழ். பல்கலைக்கழத்தில் மாணவர்களால் நிறுவப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டமை தமிழர்களின் மன உணர்வுகளைச் கொச்சைப்படுத்தி அவமதிக்கும் அரசின் செயற்பாடாகும்.

அரசின் இந்த அடாவடித்தனத்துக்கு எதிராக வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்கள் ஓரணியில் ஒற்றுமையாக நின்று இன்றைய ஹர்த்தால் போராட்டம் வெற்றியடைய முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்” – என்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.