PHI போல நடித்து தங்க நகைகள் கொள்ளை –இருவர் மக்களால் மடிக்கிப் பிடிப்பு!..
பொதுச் சுகாதார பரிசோதகர் போல நடித்து வீடொன்றிலிருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற பெண்ணொருவரும், அவருக்கு உதவிய ஆண் ஒருவரும் மக்களால் மடிக்கிப் பிடிக்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. தொண்டமானாறு அரசடியிலேயே இச்சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளதோடு, குறித்த இருவரும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் மக்களால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
வீடொன்றுக்குச் சென்ற பெண் ஒருவர், அங்கிருந்தவர்களை அழைத்து தன்னை பொதுச்சுகாதார பரிசோதகராக அறிமுகப்படுத்தி, வெள்ள நிலமை தொடர்பில் ஆராய வந்துள்ளேன் என்று கூறியுள்ளார். அவர் கறுப்பு மழை அங்கி அணிந்திருந்துள்ளார். வீட்டின் சுற்றாடலில் தேங்கி நின்ற வெள்ளத்தை தனது அலைபேசியில் ஒளிப்படங்கள் எடுத்த அந்தப் பெண், ஆடை மாற்றுவதற்கு அறையைத் தருமாறு கேட்டுள்ளார். அதனால் அறை ஒன்றை வீட்டிலுள்ளவர்கள் வழங்கியுள்ளனர். அதற்குள் சென்று கதவைப் பூட்டிவிட்டு பெட்டகத்திலிருந்த 5 தங்கப்பவுண் தாலிக்கொடி, சங்கிலி, மோதிரங்கள் ஆகியவற்றை கொள்ளையிட்டு அந்தப் பெண் அங்கிருந்து தப்பித்துள்ளார்.
சந்தேகம் கொண்ட குடும்பத்தினர் அறைக்குள் சென்று பார்த்த போது, பெட்டகத்திலிருந்த நகைகளைக் காணவில்லை. சம்பவம் தொடர்பில் அயலவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அனைவரும் அப் பெண்னை தேடியுள்ளனர். இதன்போது அப்பெண் ஆண் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் பலாலி பகுதியில் பயணித்த போது, அவர்கள் இருவரையும் துரத்திச் சென்றோர் மடக்கிப்பிடித்துள்ளனர். இருவரும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பட்டனர். பெண்ணின் கைப்பையில் இருந்து பெருமளவு நகைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. நகைகள் கொள்ளையிடப்பட்ட வீட்டின் உரிமையாளர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதேவேளை, அந்தப் பெண் வேறு சில வீடுகளுக்குச் சென்று தன்னை கிராம அலுவலகர் எனக் கூறியுள்ளார் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துக்களேதுமில்லை