பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தமது செயற்பாடுகளை செயற்படுத்த வேண்டும் – மகேசன்
பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தமது செயற்பாடுகளை செயற்படுத்த வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கா. மகேசன் தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் தற்போதைய கொரோனா நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலை காணப்படுகின்றது கடந்த ஒக்டோபர் மாதத்தின் பின் தொற்று நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதேவேளை யாழில் தொற்றுக்குள்ளான 126 நபர்கள் பூரணமாக சுகமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள். தற்போதைய நிலையில் 1415 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 598 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் .சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நிவாரணப் பொதிகள் கட்டங்கட்டமாக தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.
கடந்த இரண்டு மூன்று நாட்களாக யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைவடைந்து செல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இருந்த போதிலும் அந்த நிலைமையினை நாங்கள் விழிப்பாக இருந்து கடந்து செல்லவேண்டிய நிலை காணப்படுகின்றது. எனவே பொதுமக்கள்சுகாதார வழிகாட்டல்களைப் பேணி முக கவசம் அணிந்து தங்களுடைய வழமையான செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் நமக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமையிலிருந்து பாதுகாப்பாக கடந்து செல்ல முடியும்.
இந்த நிலையில் கொரோனா தொற்றினை தடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் சற்று யாழ் மாவட்டத்தில் தளர்த்தப்பட்டுள்ளன . பாடசாலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேபோல் எதிர்வரும் காலங்களில் தனியார் கல்வி நிலையங்களை ஆரம்பிப்பதற்குரிய அறிவுறுத்தல்கள் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் சினிமா திரையரங்குகள் மற்றும் வழிபாட்டு இடங்கள் போன்றவற்றில் சிலதளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது சில கட்டுப்பாடுகளுடன் சிலகட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டும் உள்ளன.
இதனைவிட கடந்த வாரம் தொடக்கம் மீன் சந்தைகள், அதேபோல் மூடப்பட்டிருந்த கடைகளினை மீள திறப்பதற்குரிய அனுமதி சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளது
எனினும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தமது செயற்பாடுகளை செயற்படுத்த வேண்டும். அதேபோல் நேற்றைய தினம் இடம்பெற்ற சுகாதார வழிகாட்டல் குழுவின் சிபார்சின் படி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில் திருமண மண்டபங்கள், வரவேற்பு மண்டபங்கள் மற்றும் ஹோட்டல் மண்டபங்களை திறப்பதற்குரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெளி மாவட்டங்களில் பயணங்களை மேற்கொள்வோர் தமது பயணவிவரங்களை சுகாதாரப் பிரிவினருக்கு வழங்குவதன் மூலமே அதற்குரிய நடவடிக்கையினை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை