காரைதீவு பிரதேச சபை எல்லைகளில் அத்துமீறும் செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது : காரைதீவு தவிசாளர் ஜெயசிறில்

(நூருல் ஹுதா உமர்)

மக்களுக்கு தீங்கு விளைவிக்காத எவ்வகையான நடவடிக்கைகளுக்கும் பிரதேச எல்லைகள் கடந்து ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க எந்நேரமும் நாங்கள் தயாராக உள்ளோம். அதற்காக எங்களின் பிரதேசங்களில் வந்து அத்துமீறும் காரியங்களை செய்ய யாருக்கும் அனுமதியளிக்க முடியாது. எல்லா வகையான செயற்பாடுகளுக்கும் முறையான வழிமுறைகள் இருக்கின்றது. அதை பின்பற்றி நடப்பதே எல்லோருக்கும் நல்லதாக அமையும் என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில் தெரிவித்தார்.

சாய்ந்தமருது மாளிகைக்காடு பிரதேசத்தில் சுய தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு வருவதாக அறிவித்து மாளிகைக்காடு வர்த்தக நிலையங்களை மூடிவிடுமாறு கோரி ஞாயிறன்று பிந்திய இரவில் சிலர் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் உண்மை நிலவரத்தை அறிய அவருடன் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் பேசிய அவர்,

வர்த்தக நிலையங்களில் அவர்களின் முழுநாளுக்குமான ஆயத்தங்களை செய்து கொண்டு அன்றைய வியாபாரத்தில் அந்த வர்த்தகர்கள் ஈடுபடுகிறாரகள். இடையில் சென்று கடைகளை மூடுமாறு கேட்டால் அவர்களால் எப்படி ஒத்துழைப்பு வழங்க முடியும். கடைகளை மூட சொல்வோர் அதற்கான சரியான காரணங்களையும் கூற வேண்டும். வர்தகர்களினதும், மக்களினதும் வயிற்றில் அடிக்க யாருக்கும் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை. அதே நேரம் மக்களுக்கு நன்மையானவற்றை செய்ய பின்நிற்க போவதுமில்லை

காரைதீவுக்கான நிர்வாகம் சிறப்பாக உள்ளது. அப்படி முடிவுகளை எடுப்பதாயின் பிரதேச சபை, பிரதேச செயலகம்,சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், சம்மாந்துறை பொலிஸ் ஆகிய நாங்கள் திணைக்கள தலைவர்கள், சமூக நல ஆர்வலர்கள், மக்கள் பிரதிநிதிகளை அழைத்து தீர விசாரித்து கலந்துரையாடலின் பின்னர் முடிவுகளை எடுத்து மக்களுக்கு அறிவிப்போம். அதையே மக்கள் பின்பற்ற வேண்டும். இப்படி முகவரியில்லாத அறிவித்தல்களை விட்டு மக்களை குழப்ப வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக்கொள்கிறேன். குறுக்கு வழிகளை கையாளாமல் சரியான பாதையில் பயணிக்க முனையுங்கள்.

கொரோனா விதிமுறைகளையும் சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்றி காரைதீவு பிரதேசத்தில் வர்த்தகத்தில் ஈடுபடுமாறு சகல வர்த்தகர்களையும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.