ஆட்சியைக் கைப்பற்றும் இலக்குடன் நாம் உறுதியுடன் பயணிக்கின்றோம் – சஜித் பிரேமதாஸ

நாம் ஆட்சி அதிகாரத்துக்கு வந்திருந்தால் நிச்சயம் அரசியல் தீர்வுக்கான நடவடிக்கையை முன்னெடுத்திருப்போம். துரதிஷ்டவசமாக நாம் இரண்டு பிரதான தேர்தல்களிலும் வெற்றியடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் இலக்குடன் நாம் உறுதியுடன் பயணிக்கின்றோம்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலும் நேற்று கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் சஜித் பிரேமதாஸ தனது மனைவி ஜலானியுடன் கலந்துகொண்டார். அதன்பின்னர் நாட்டின் தேசிய பிரச்சினை தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழரின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் நாம் மதிக்கின்றோம். அவர்கள் கொண்டாடும் பண்டிகைகளை நாமும் இணைந்து கொண்டாடுகின்றோம். அதன் ஒரு நிகழ்வே எமது அலுவலத்தில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் விழாவாகும்.

இந்த நாட்டில் தமிழர்கள், சிங்களவர்களுடன் இணைந்து வாழவே விரும்புகின்றார்கள். பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள்தான் அவர்கள் தீர்வு கேட்கின்றார்கள். நாட்டைப் பிரிப்பது அவர்களின் நோக்கம் அல்ல. இதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பல தடவைகள் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்துள்ளார்.

சகல இன மக்களும் ஏற்கும் புதிய அரசமைப்பு இவ்வருடம் கொண்டுவரப்பட வேண்டும். இதனூடாகத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட தேசிய பிரச்சினைகள் அனைத்துக்கும் நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இந்த நிலைப்பாட்டில் நாம் உறுதியாக உள்ளோம். ஆனால், இனவாத சிந்தனையில் செயற்படும் ராஜபக்ச  அரசு இதை நிறைவேற்றுமா என்பது கேள்விக்குறி.

நாம் ஆட்சி அதிகாரத்துக்கு வந்திருந்தால் நிச்சயம் அரசியல் தீர்வுக்கான நடவடிக்கையை முன்னெடுத்திருப்போம். துரதிஷ்டவசமாக நாம் இரண்டு பிரதான தேர்தல்களிலும் வெற்றியடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் இலக்குடன் நாம் உறுதியுடன் பயணிக்கின்றோம்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.