18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயிற்சி என்கிற திட்டம் முற்றிலும் பொருத்தம் அற்ற விடயம் -ஹசன் அலி

இனம், மதம் போன்ற காரணங்களால் மக்களை கூறு போட்டு வைத்திருக்கின்ற வகையிலான கருத்துக்களை கூற முடிந்த அமைச்சர்களை கொண்டிருக்கின்ற இந்நாட்டை பொறுத்த வரையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயிற்சி என்கிற திட்டம் முற்றிலும் பொருத்தம் அற்ற விடயம் ஆகும் என்று சுகாதார மற்றும் போஷாக்கு துறை முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான எம். ரி. ஹசன் அலி  தெரிவித்தார்.

இவரின் நிந்தவூர் இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து இது தொடர்பாக பேசியபோது ஹசன் அலி மேலும் தெரிவித்தவை வருமாறு
உலக நாடுகள் பலவற்றிலும் கட்டாய இராணுவ பயிற்சி திட்டம் காணப்படவே செய்கின்றது. இத்திட்டம் அங்கெல்லாம் வெற்றிகரமானதாகவும் இருக்கின்றது. இத்திட்டம் பிழையானது அல்லது தவறானது என்று நாம் சொல்ல வரவில்லை. ஆனால் இலங்கை போன்ற நாட்டுக்கு இது முற்றிலும் பொருத்தம் அற்றது என்பதே எமது வலுவான நிலைப்பாடாகும்.
அவை இன பிரச்சினை இல்லாத நாடுகள். ஒரே நாடு, ஒரே சமூகம் என்கிற சிந்தனையை கொண்டிருக்கின்ற நாடுகள். ஆனால் மூன்று தசாப்த காலங்கள் யுத்தம் நடந்த நாடு இலங்கை. இலங்கையின் வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம் சமூகம் இன சுத்திகரிப்பு செய்யப்பட்டு இருக்கின்றது. மூவின மக்களுக்கும் இடையில் கலவரங்கள் நடந்தேறி உள்ளன. இன முறுகல்களும் அடிக்கடி இடம்பெற்ற வண்ணம் உள்ளன.சஹ்ரான் போன்றோரும் தோன்றினர். கடந்த கால சம்பவங்களுக்கு  ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் இருந்து தீர்வு, தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகின்ற நிலைமை இருக்கின்றது. இன பிரச்சினைக்கான தீர்வு இன்னமும் எட்டாக்கனியாகவே உள்ளது.
ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது குறித்து குரானில் எதுவுமே சொல்லப்பட்டு இல்லை என்று பாராளுமன்றத்தில் அமைச்சர் ஒருவர் பேசி இருக்கின்றார். அவர் பேசிய வேகத்தை பார்க்கின்றபோது அவர்கள் ஒரு புதிய குரானை உருவாக்கி தந்து அதைதான் முஸ்லிம்கள் பின்பற்றி நடக்க வேண்டும் என்று அமுல்படுத்துவார்கள் போல விளங்குகின்றது. ஜனாஸா விடயத்தில் உலகம் ஒரு பக்கத்திலே நிற்கின்றது. எமது நாடுதான் முரண்டு பிடிக்கின்றது. இது முஸ்லிம்களை இன்னமும் கூடுதல் வேதனைகளுக்கு உட்படுத்தி இருக்கின்றது. சமூகங்களை கூறு போடுகின்ற வகையிலான கருத்துகளை கூற முடிந்த அமைச்சர்களை கொண்டிருக்க கூடிய எமது நாட்டை பொறுத்த வரை கட்டாய இராணுவ திட்டம் வெறும் அபத்தமே ஆகும்.
உரிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்று தருவதை விடுத்து மக்கள் மத்தியில் புதிய பிரச்சினைகளை உருவாக்கி வைத்து மக்களை திசை திருப்பி வைத்திருப்பதற்கு முயற்சிக்கின்றார்கள். கொரோனா காலத்தில் இரு பாரிய தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஆனால் மாகாண சபை தேர்தலை கொரோனாவை காரணம் காட்டி  தள்ளி போட்டு கொண்டு செல்கின்றனர். இருப்பினும் இந்தியாவின் அழுத்தத்தை தவிர்க்க முடியாதவர்களாக அவர்கள் இருப்பது சற்று ஆறுதல் தருகின்றது. எது எப்படி இருந்தாலும் சிறுபான்மை மக்கள் செறிந்து வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேர்தலை பிற்போட்டு கொண்டே செல்வதன் மூலம் ஆளுனர் ஆட்சியை தக்க வைத்து கொண்டிருக்கின்றார்கள்.
கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தில் இனத்துவ மேலாதிக்க சிந்தனை மேலோங்கி காணப்படுகின்றது. பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் என்கிற காரணத்துக்காக அவர்கள் கனிஷ்ட நிலை உத்தியோகத்தர்களாக இருந்தும் சிரேஷ்ட நிலை பதவிகளுக்கு நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் என்கிற காரணத்துக்காக சிரேஷ்ட நிலை உத்தியோகத்தர்களாக இருந்தும் கனிஷ்ட நிலை உத்தியோகத்தர்களுக்கு கீழ் நம்மவர்கள் சேவையாற்ற வேண்டிய நிலைமையே நின்று நீடிக்கின்றது.
எனவே சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தி தர கூடிய பொறிமுறைகளை கொண்ட திட்டங்களேதான் எமது நாட்டுக்கு அவசியம் தேவையே ஒழிய கட்டாய இராணுவ பயிற்சி அல்ல. அது இன, மத ரீதியாக பிரித்து வைக்கப்பட்டு இருக்கின்ற இந்நாட்டு மக்களிடையே  இன, மத ரீதியான பிரச்சினைகளை இன்னமும் கூர்மைப்படுத்தி விடும். மேலும் பாரதூரமான வீண் சந்தேகங்களை சமூகங்களுக்கு இடையில் தூவி விடும். யாருடன் யுத்தம் செய்வதற்காக கட்டாய இராணுவ பயிற்சியை மக்களுக்கு வழங்க வேண்டி உள்ளது? என்கிற கேள்வி தொக்கு நிற்கின்றது. இதில் ஏதேனும் துஷ்பிரயோகங்கள் நேரலாம் என்கிற நியாயமான அச்சமும் இருக்கவே செய்கின்றது.
மொத்தத்தில் சிறுபான்மை மனோபாவத்தில் சிந்திக்கின்ற பெரும்பான்மை சமூகத்தினரையும், பெரும்பான்மை மனோபாவத்தில் சிந்திக்கின்ற சிறுபான்மை சமூகத்தினரையும் கொண்டிருக்கின்ற எமது நாட்டுக்கு  கட்டாய இராணுவ பயிற்சி திட்டம் உகந்ததே அல்ல. ஆட்சியாளர்கள் இதயங்களை திறந்து இதை ஏற்று கொள்ளதான் வேண்டும். ஒரே நாடு, ஒரே சட்டம் என்று பெயரளவில் சொல்லி கொண்டு இருக்க முடியாது. பலாத்காரமாகவும், ஆயுதமுனையிலும் நாட்டு மக்களின் அடிப்படை மனோபாவத்தை மாற்றவே முடியாது. புரிந்துணர்வுதான் அத்தியாவசியமானதாக உள்ளது. ஆனால் அரசியல்வாதிகள் போட்டி மன பான்மை காரணமாக மக்களை வேண்டும் என்றே பிரித்து வைத்திருக்கின்றனர்.
புதிய அரசியல் அமைப்பை கொண்டு வந்து நீண்ட காலமாக இந்நாட்டில்  புரையோடி காணப்படுகின்ற இன பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்று தருவதிலே கூடுதல் கவனம் செலுத்துதல். இலங்கையில் இது வரை இடம்பெற்று இருக்கின்ற அரசியல் யாப்பு மாற்றங்கள் தனிநபர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டவை என்கிற விமர்சனம் வெளிப்படையானதாகவே நிற்கின்றது. இடம்பெற உள்ள யாப்பு மாற்றமேனும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுகின்ற வகையில் அமைய பெறுதல் வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு ஆகும். குறிப்பாக இந்நாட்டில் காலம் காலமாக வாழ்ந்து வருகின்ற சிறுபான்மை மக்கள் அவர்களின் இருப்பையும், மத, கலாசார விழுமியங்களையும் பாகுபாடு இன்றி சுதந்திரமாக பேணி பாதுகாப்பதற்கான உரிமைகளை புதிய யாப்பு உறுதிப்படுத்த வேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.