முறையற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சி மூலம் தமிழ் மக்களைக் கிளர்ந்தெழ வைக்காதீர்கள்-மாவை சேனாதிராஜா

வடக்கு மாகாணத்தில் முறையற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மூலம் தமிழ் மக்களைக் கிளர்ந்தெழ வைக்காதீர்கள் என்று தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கேட்டுக்கொண்டார்.

இராஜாங்க அமைச்சருக்கும் மாவை சோ.சேனாதிராஜாவுக்கும் இடையில் நேற்று தொலைபேசி ஊடாக நீண்ட நேரம் பேச்சு நடைபெற்றது.

இதன்போது, யாழ். நிலாவரைப் பகுதியில் திடீரென தொல்லியல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் உள்ளிட்டவர்கள் வருகை தந்து தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளை நடத்தியமை தொடர்பில் இராஜாங்க அமைச்சரின் கவனத்துக்கு மாவை கொண்டு வந்தார்.

அத்துடன், இந்தச் செயற்பாடானது தமிழ் மக்கள் மத்தியில் கிளர்ச்சிகளை ஏற்படுத்துகின்றது எனவும், பதற்றமான சூழல்களை உருவாக்குகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முல்லைத்தீவு – குருந்தூர் மலை விடயம் தொடர்பாகவும் இராஜாங்க அமைச்சருடன் மாவை பேசினார்.

மேலும், யாழ். பல்கலைக்கழகத்தில் தொல்லியல்துறை சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் இருக்கும்போது பெரும்பான்மை சமூகத்தினரை மட்டும் பயன்படுத்தி நிலங்களை ஆக்கிரமிக்கும் வகையிலான செயற்பாடுகளை உடன் நிறுத்தும்படியும் அவர் கோரினார்.

இதற்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, எதிர்வரும் காலத்தில் அகழ்வாராய்ச்சிப் பணிகளின்போது யாழ்.பல்கலைக்கழகத் தரப்பினரையும் உள்ளீர்ப்போம் என்றும், இனம், மதத்தின் பெயரால் தொல்லியல்துறை செயற்படவில்லை என்றும் உறுதியளித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்