காலம் கடத்துவது தேவையற்ற பிரச்சினைக்கு வழிவகுக்கும் என அரசுக்கு திஸ்ஸ எச்சரிக்கை
“இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யலாம் என்ற நிபுணர் குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தாமல், காலம் தாழ்த்துவது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.”
– இவ்வாறு வைரஸ் தொடர்பான விசேட நிபுணரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
சோசலிச மக்கள் கட்சி கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“விசேட வைரஸ் நிபுணர்களின் அறிக்கையை அரசால் நியமிக்கப்பட்டுள்ள குழுவுக்குச் சமர்ப்பிப்பதில் எவ்வித பயனும் இல்லை. அறிக்கையை ஆராயுமளவுக்கு அந்தக் குழுவில் வைரஸ் தொடர்பான நிபுணர்கள் இல்லை.
இலங்கையில் கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதா? இல்லையா? என்ற பிரச்சினையை ஏற்படுத்தி, ஒரு சமூகத்தின் மத நம்பிக்கை அகௌரவப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு இந்த விடயத்தைத் தொடர்ந்தும் இழுத்தடிக்காமல், கொரோனாத் தொற்றால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான சுகாதார வழிகாட்டலொன்றை அறிமுகப்படுத்தி, அதற்கான அனுமதியை வழங்க வேண்டும்” – என்றார். 












கருத்துக்களேதுமில்லை