வாழைச்சேனை-அகழ்வாராட்சி திட்டத்தினை நிறுத்துமாறு தெரிவித்து பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் நாசிவன் தீவு கிராமத்தில் அண்மையில் அமைக்கப்பட்ட இலங்கை மீன் பிடிக் துறை முகங்கள் கூட்டுத்தாபணத்தின் மணல் கழுவுதல் மற்றும் அகழ்வாராட்சி திட்டத்தினை நிறுத்துமாறு தெரிவித்து பிரதேச மக்கள்நேற்று (27) கவனயீர்ப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.
  நாசீவன் தீவு கிராமத்தில் ஓன்று கூடிய பிரதேச மக்கள் கையில் பாதாதைகளை கையில்  ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு தியாவட்டவான்,ஓட்டமாவடி, ஆகிய கிராமங்களை ஊடறுத்து சுமார் 8 கிலோ மீற்றர் தூரம் சுடும் வெயில் என்றும் பாராமல் கால் நடையாக ஊர்வலமாக வாழைச்சேனையை வந்தடைந்தனர்.
சிவன் தீவு மண் வளத்தை சுரண்டாதே,எமது வளம் எமக்கு வேண்டும்,சிவன் தீவு மக்களின் குடி நீரை உப்பு நீராக்காதே,மண் மாபியாக்களை வெளியேற்று, என்பன போன்ற வாசகங்களை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ் கவனயீர்ப்பு போராட்டமானது வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக,கோறளைப்பற்று பிரதேச சபைக்கு முன்பாக மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாகவும் பரவலாக மேற்கொள்ளப்பட்டது.
காலை 11 மணிக்கு ஆரம்பமான குறித்த போராட்டம் மாலை 6 மணிவரை நீடித்தது.
 இதன்போது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர்களிடம் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர்.
முன்னைய தவிசாளர் அவர்களது பிரதிநிதிகளுக்கு ஆதரவு வழங்கியுள்ளார் என்பது தெரிகிறது.
பிரதேச மக்களின் ஆணைக்கு எதிராக தாம் ஒரு போதும் செயற்படபோவதில்லை  என்றும் இதற்கான வியாபரா பத்திர அனுமதியினை வழங்கபோவதில்லையெனவும் கோறளைப்பற்று தவிசாளர் த.யசோதரன் இதன்போது தெரிவித்தார்.
சுற்றாடல் அதிகார சபை, புவிசரிதவியல் திணைக்களம்,கரையோரம் பேணல் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் ஏணைய சம்பந்தப்பட்ட  அரச திணைக்களங்களின் அனுமதியுடன் இவ் நடவடிக்கை முன்னெடுக்கப்படவேண்டும்.
இதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. சுற்றாடல் அதிகார சபைக்கு தெரியப்படுத்தி அவர்கள் சென்று இன்று இவ் நடவடிக்கையை நிறுத்தியுள்ளனர். இதேபோன்று ஏனைய திணைக்களங்களுக்கும் குறித்த விடயம் தொடர்பாக அறிவித்துள்ளோம். எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமையவே செயற்படவேண்டுமே ஒழிய மேலதிக செயற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளமுடியாது என மீன் பிடி துறைமுக முகாமையாளருக்கும் தெரியப்படுத்தியுள்ளேன்.
பெரும்பாலும் அவர்கள் நாளை முதல் (28) எதுவித முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளமாட்டார்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று மேற்படி அமைப்புக்களை அழைத்து கலந்துரையாடல் மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கோறளைப்பற்று பிரதேச செயலாளர் கோ.தணபாலசுந்தரம் கருத்து தெரிவித்தார்.
உடனடியாக இன்றே தீர்வு பெற்று மணல் கழுவுதல் மற்றும் அகழ்வாரட்சி திட்டத்தினை நிறுத்தி தருமாறு கோரினர். பின்னர் பிரதேச செயலகம் முன்பாக அமர்ந்திருந்து பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வரும்வரை இவ்விடத்தினை விட்டு அகன்று செல்வதில்லை என மதிய உணவின்றி காத்திருந்தனர்.
சம்பவத்தை கேள்வியுற்ற பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர்கள் சம்பவ இடத்திற்க வருகை தந்து குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடினார்கள்.
இவ்விடயத்தினை நிறுத்துவதற்கு எல்லோரும் ஒற்றுமைப் படவேண்டும். மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரிடம் மண் அகழ்வு தொடர்பான விடயத்திற்கான கூட்டத்தினை கூட்டுப்படி கூறினால் அதனை கூட்டுகின்றார் இல்லை. எனவே குறித்த மணல் அகழும் இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மக்களுக்காக சேவையாற்றும் அரச அதிகாரிகள் மக்களுக்காக சேவையாற்ற வேண்டும். மக்கள் ஒற்றுமையாக எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான கு.குணசேகரன், கி.சேயோன் அகியோர்களும் கருத்து தெரிவித்தனர்.
 கடந்த காலம்  வாழைச்சேனை மீன் பிடி துறை முகத்தின் ஆற்றுப் பகுதியில் படகுகள் மற்றும் கப்பல் போக்குவரத்திற்கு அமைய ஆழப் படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
 இதன்போது பெறப்பட்ட மணல் பெருமளவில் கரையோரத்தில் சேகரிக்கப்பட்டது. நீண்ட காலமாகியும் அவை அகற்றப்படாமல் காணப்பட்டது. இவை தற்போது கழுவப்பட்டு நாட்டின் தென் பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையில் தனியார் நிறுவனமொன்று ஈடுபட்டு வருகின்றது. குறித்த செயற்பாட்டின் மூலம் தமது கிராமத்தின் குடி நீர், உவர் நீராக மாறுவதாகவும் வீதிகள் சேதமடைவதாகவும் தெரிவித்து குறித்த செயற்பாட்டிற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து கலகத்தில் தொடர்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த போராட்டத்தில் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் பங்குபற்றியிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.