குருந்தூரில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டது முற்றிலும் உண்மை; போலீசாருக்கு கள நிலையை நேரடியாக காண்பித்தார் – ரவிகரன்

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்ட விடயம் உண்மையானது என்ற விடயத்தினை, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள்  போலீசாருக்கு நேரடியாக உறுதிப்படுத்தியுள்ளார்.

குருந்தூர் மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் ரவிகரன் அவர்கள் அண்மையில் முல்லைத்தீவு போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவுசெய்திருந்த நிலையில், அவ்விடயத்தினை உறுதிப்படுத்த வேண்டுமென போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந் நிலையிலேயே அங்கிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளம் காணாமல் ஆக்கப்பட்ட விடயம் உண்மை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குருந்தூர் மலையில் இருந்த முச்சூலம் உட்பட தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதுடன், அங்கு தமிழ் மக்கள் சென்று வழிபடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலே அப்பகுதி மக்களும், குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் கோவில் நிர்வாகத்தினரும் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

இந் நிலையில் கடந்த 27.01.2021 புதன் கிழமையன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பிர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் குருந்தூர் மலைக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்டிருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக 27.01.2021 அன்றைய தினமே முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு – போலீஸ் நிலையத்திற்குச் சென்று குருந்தூர் மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலும், தமிழ் மக்களின் வழிபாட்டிற்கு தடைவிதிக்கின்றமை தொடர்பிலும் அப்பகுதிக் கிராம மக்களின் சார்பாக முறைப்பாட்டினைப் பதிவுசெய்திருந்தார்.

அத்தோடு காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் மீண்டும் இருந்த இடத்தில் நிறுவப்படவேண்டும் எனவும், தமிழ் மக்கள் குருந்தூர்மலைக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள தொடர்ந்தும் அனுமதிக்கப்படவேண்டும் எனவும் ரவிகரன் குறித்த முறைப்பாட்டினூடாகக் கோரியிருந்தார்.

அந்த வகையில் போலீசார் முறைப்பாட்டினையும், முறைப்பாட்டோடு தொடர்புடைய ஆதாரங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அத்தோடு முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு குருந்தூர் மலையில் இருந்த முச்சூலம் உட்பட தமிழ் மக்களின் வழிபாட்டு அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் பிறிதொரு நாளில் தாம் நேரடியாகச் சென்று பார்வையிட்டு அதனை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், அப்போது முறைப்பாட்டாளரான ரவிகரன் அவர்களும் குருந்தூர் மலைக்கு வரவேண்டுமென போலீசாரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய 29.01.2021 இன்றையதினம்  போலீசாரோடு, முறைப்பாட்டாளர்கள் சார்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் மற்றும், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் குருந்தூர் மலைக்குச் சென்று அங்கு தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதை போலீசாருக்கு உறுதிப்படுத்தியிருந்தார்.

அப்போது குருந்தூர் மலைப் பகுதிக்குள் முறைப்பாட்டாளரான ரவிகரன் மற்றும் அவருடன் மேலும் ஒருவர் மாத்திரமே செல்ல போலீசாரால் அனுமதிக்கப்பட்டதுடன், மலைப்பகுதியில் காணொளி மற்றும் புகைப்படம் எடுப்பதற்கும் போலீசார் அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுடன், ஊடகங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.