உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: விசாரணைக்குழுவின் அறிக்கை கோட்டாவிடம் கையளிப்பு

இலங்கையில் 2019ஆம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவிடம் நேற்று (01) கையளிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினமன்று கொழும்பு, நீர்கொழுப்பு மட்டக்களப்பு ஆகிய இடங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 268 பேர் கொல்லப்பட்டதுடன் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக 2019ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி அப்போதிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவினர் 15 மாதங்களாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முன்னாள் பொலிஸ்மா அதிபர், புலனாய்வுத் துறை அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் விசாரணைகளை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்ததுடன், கடந்த 28ஆம் திகதி தமது விசாரணை நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்திருந்தனர்.

இதன்படி தயாரிக்கப்பட்ட விசாரணை அறிக்கை அந்த ஆணைக்குழுவினரால் இன்று முற்பகல் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், சம்பவத்துக்குக் காரணமானவர்கள், பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பான விபரங்களும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்