ஓரணியில் திரள வேண்டும் தமிழ்பேசும் உறவுகள்! – கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அறைகூவல்

“தமிழ்பேசும் மக்களை இலக்குவைத்து இலங்கை அரசு மேற்கொண்டு வரும் அராஜகச் செயல்களைக் கண்டித்தும், வடக்கு, கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராகவும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஐ.நாவிடம் நீதி கோரியும் சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை நாளை 3ஆம் திகதி முதல் எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைத்துத் தமிழ்பேசும் உறவுகளும் ஓரணியில் திரண்டு ஆதரவு வழங்க வேண்டும்.”

– இவ்வாறு அறைகூவல் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

அவர் இன்று விடுத்துள்ள விசேட அறிவிப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“வடக்கு, கிழக்கு தமிழ்பேசும் மக்களின் பூர்வீக தாயகம். இது இலங்கை அரசாலும், அதன் படைகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாலேயே அதைத் தடுக்கும் வகையிலும், எமது பூர்வீக தாயகத்தை நாமே ஆளும் வகையிலும் சுயநிர்ணய உரிமை கேட்டுப் போராடி வருகின்றோம். ஆரம்பத்தில் அறவழியிலும், அதன்பின்னர் ஆயுத வழியிலும், மீண்டும் ஜனநாயக வழியிலும் நாம் போராடி வருகின்றோம்.

ஆனால், தமிழர்களின் உரிமைப் போராட்டங்களை மதிக்காத இலங்கை அரசு, தமிழர்கள் மீதான அடக்குமுறைகளையும், இன அழிப்பு நடவடிக்கைகளையும் பகிரங்கமாக மேற்கொண்டு வருகின்றது.

தற்போதைய அரசின் நடவடிக்கைகள் மிகவும் மோசமானவையாக உள்ளன. விசேடமாக அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தை வலுக்கட்டாயமாக நிறைவேற்றிய அரசு, வடக்கு, கிழக்கை இராணுவ மயமாக்கி வருகின்றது. பாரிய குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான இராணுவ அதிகாரிகளுக்கும், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளுக்கும்  பதவி உயர்வுகளை வழங்கும் அரசு, அவர்களை முக்கிய பொறுப்புக்களில் நியமித்தும் வருகின்றது. சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத்தின் கையே தற்போது ஓங்கி வருகின்றது.

அத்துடன் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரை படையினர், பொலிஸார் மற்றும் புலனாய்வார்களைக் கொண்டு அச்சுறுத்தி வரும் அரசு, அவர்களின் சுதந்திரமான கடமைகளுக்குத் தொடர்ந்தும் இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றது.

பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து – சிறுபிள்ளைத்தனமான காரணங்களைக் கூறி வழக்குகளைத் தொடுத்து நீதிமன்றங்களைத் தவறாகப் பயன்படுத்தும் இந்த அரசு, நீதியான வகையில் நீதிமன்றங்கள் செயற்படுவதற்கு முட்டுக்கட்டையாகவும் இருந்து வருகின்றது.

தமிழ் மக்களின் கலாசாரப் பண்பாட்டு அடையாளங்களை இந்த அரசு திட்டமிட்டு அழித்து வருகின்றது.

தமது கட்டுப்பாட்டில் இருக்கும் திணைக்களங்கள் ஊடாக வடக்கு, கிழக்கில் பௌத்த மயமாக்கல் திட்டங்களை இந்த அரசு மேற்கொண்டு வருகின்றது.

வடக்கு, கிழக்கில் பல இந்து ஆலயங்களைத் தொல்லியல் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் ஆக்கிரமிக்கும் அரசு, அங்கு பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கும் முயற்சித்து வருகின்றது.

அதேவேளை, வடக்கு, கிழக்கில் காணிகளை அபகரிக்கும் அரசு, சட்டவிரோத சிங்களக் குடியேற்றங்களையும் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது.

முஸ்லிம் மக்களின் மத உரிமையில் கைவைத்துள்ள இந்த அரசு, கொரோனாவால் உயிரிழப்போரின் ஜனாஸாக்களை அம்மக்களின் விருப்பத்துக்கு மாறாக எரியூட்டி வருகின்றது. மத உரிமைக்காகப் போராடும் முஸ்லிம் சமூகத்தைப் பழிவாங்கும் அரசு, அவர்களை அடக்கி ஆள முனைகின்றது.

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் பலரைக் கைதுசெய்த அரசு, அவர்களைத் தடுத்துவைத்துள்ளது.

பல வருடங்களாக சிறைகளில் வாழும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆக்கபூர்வமான எந்தவித நடவடிக்கைகளையும் அரசு எடுக்கவில்லை.

தமக்கு விசுவாசமான குற்றவாளிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ள அரசு, தமிழ்  அரசியல் கைதிகளை விடுதலை செய்ய மறுப்புத் தெரிவித்து வருகின்றது.

வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதி கேட்டு பல வருடங்களாகப் போராடி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கான நீதியை வழங்காது அரசு ஏமாற்றி வருகின்றது.

ஆயிரம் ரூபா நாள் சம்பள உயர்வு கேட்டுப்  போராடி வரும் மலையகத் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்றாது அரசு இழுத்தடிப்புச் செய்து வருகின்றது.

அரசின் இவ்விதமான நடவடிக்கைகள் நாட்டின் ஜனநாயகத்துக்கு உகந்தவையல்ல.

அரசின் கொடூரங்களால் பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் மக்களுக்கு ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகம் நீதியைப் பெற்றுத் தரவேண்டும் என்று கோரி முன்னெடுக்கப்படவுள்ள இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் தமிழ்பேசும் உறவுகள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகளின் வேண்டுகோளுக்கிணங்க உரிமைகளை இழந்து நீதி மறுக்கப்பட்ட சமூகமாக வாழும் தமிழ் பேசும் மக்களாகிய எமது அவலக் குரல்கள் சர்வதேசத்தின் மனச்சாட்சிகளைத் தட்டும் அளவுக்கு எமது போராட்டத்தை பெரும் போராட்டமாக அஹிம்சை வழியில் முன்னெடுக்க வேண்டும்” – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்