வடக்கில் நான்காம் நாளில் 704 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினருக்கான கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் நான்காம் நாளில் 704 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று வரையான கடந்த நான்கு நாட்களில் வடக்கில் ஏழாயிரத்து 925 மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இது மொத்த உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையில் 80 வீதமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து வைத்தியர் கேதீஸ்வரன் குறிப்பிடுகையில், “வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கான கொவிட்-19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்தத் தடுப்பூசி மருந்து வழங்கலுக்கு வடக்கு மாகாணத்தில் ஒன்பதாயிரத்து 944 சுகாதாரத் துறை சேவையாளர்கள் தகுதி பெற்றனர். இந்தப் பணியின் முதல் நாளில் இரண்டாயிரத்து 997 பேர் (30 வீதத்தினர்) கொரோனா தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இரண்டாம் நாளில் வடக்கில் ஆயிரத்து 530 சுகாதார சேவையாளர்கள் தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளதுடன் மூன்றாம் நாளில் இரண்டாயிரத்து 694 பேர் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். அத்துடன், நான்காம் நாளில் 704 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பவதிகள் மற்றும் கர்ப்பம் தரிக்கக் காத்திருப்போர் என மூன்று வகையினரை இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்