சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னாரிலிருந்து கொழும்பிற்கு ‘சாக்கு சாமியார்’ பாத யாத்திரை !

இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (04) காலை, மன்னாரில் இருந்து கொழும்பிற்கான பாத யாத்திரையை மன்னாரைச் சேர்ந்த ‘சாக்கு சாமியார்’ என அழைக்கப்படும் கிறிஸ்தோப்பர் கிருஸ்ணன் டயஸ் ஆரம்பித்துள்ளார்.

இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு எம் நாட்டு மக்களிடம் இன, மத, ஒற்றுமை, சாந்தி சமாதானம் நிலவவும் குறிப்பாக கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக தொடர்ச்சியாக தங்களை அர்பணித்து வரும் சுகாதார தரப்பினர், ஜனாதிபதி , பிரதமர் , பாதுகாப்பு படையினர் உட்பட அனைவரும் உடல், உள நலம் வேண்டியும் , இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டும் பாதயாத்திரை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை சுதந்திர தினமான இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணியளவில், மன்னார் மாவட்டச் செயலகத்திலிருந்து தனது பாத யாத்திரையை  அவர் ஆரம்பித்தார்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னான்டோ ஆண்டகை மற்றும் மதத்தலைவர்களின் ஆசியுடன் தனது பாத யாத்திரையை ஆரம்பித்தார்.

இதன்போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல், நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் உட்பட அதிகாரிகள் இணைந்து பாதயாத்திரையை ஆரம்பித்து வைத்தனர்.

குறித்த பாதயாத்திரையானது சுமார் 40 நாட்கள் இடம்பெறும். நாள் ஒன்றிற்கு சுமார் 10 கிலோ மீற்றர் தூரம் வரை பாத யாத்திரிகையை மேற்கொள்ளுவார். செல்லும் வழிகளில் உள்ள முக்கிய மதஸ்தலங்களை தரிசித்து செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இவர் கொழும்பிலுள்ள ஒரு முக்கிய பௌத்த மதத் தளத்தை அடைந்து, தனது பாதயாத்திரையை நிறைவு செய்ய இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரத் தினத்தை முன்னிட்டு மன்னார் தள்ளாடி புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து 41 நாட்கள் நிலத்திற்கு சாக்கு விரித்து அனுராதபுரம் வரைக்கும் உருண்டு சென்றார்.

அதனைத் தொடர்ந்து 2 ஆவது தடவையாக கடந்த ஆண்டு (2020) சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் தீவு நுழைவாயில் பகுதியில் 50 நாட்கள் பேசாமலும் உண்ணாமலும் பிற்பகல் மட்டும் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட சிறிதளவு பசும் பால் அருந்தி தவம் இருந்தவர்.

இந்த நிலையில் 3 ஆவது தடவையாக இவ்வருடம் (2021) மன்னாரில் இருந்து கொழும்பிற்கான பாத யாத்திரையை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்