கிருஷ்ணபிள்ளை செல்வராஜா தனது 36 வருட கல்விச் சேவையில் இருந்து ஓய்வு!

சம்மாந்துறை கல்வி வலய ஆசிரிய மத்திய நிலைய முகாமையாளர் அதிபர் தரம் 1 ஐ சேர்ந்த கிருஷ்ணபிள்ளை செல்வராஜா தனது 36 வருட கல்விச் சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார். இவர் அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளியினை பிறப்பிடமாகவும் நற்பிட்டிமுனையை வசிப்பிடமாகவும் கொண்டவர். 1984ஆம் ஆண்டு ஆசிரியராக முதல் நியமனம் பெற்று பதுளை மடுல்சீம மகா வித்தியாலயத்தில் கடமையாற்றி தெகிகல மகா வித்தியாலயத்தில் அதிபராகவும் பணியாற்றினார்.. பின்னர் 1989ல் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் வணிகப் பிரிவு ஆசிரியராகவும் உதவி அதிபராகவும் பணியாற்றினார்.
அக்கால கட்டத்தில் ஆசிரிய சங்கச் செயலாளர், நலன்புரி சங்கச் செயலாளர், பழைய மாணவர் சங்க செயலாளர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட பல பொறுப்புக்களில் இருந்து சேவையாற்றினார். 2003ஆம் ஆண்டு நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தின் அதிபராக நியமனம் பெற்று சேவையாற்றியதுடன் 2008 ஆம் ஆண்டு சம்மாந்துறை வலய ஆசிரிய நிலைய முகாமையாளராக நியமனம் பெற்று ஆசிரியர்களின் வாண்மைவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளார். இவர் தனது ஆரம்பக்கல்வியை நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையிலும் கல்வி கற்று பின்னர் ஜெயவர்த்தனபுர மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆகியவற்றில் விஞ்ஞானமாணி வியாபார நிருவாக துறையில் சிறப்புப்பட்டம் பெற்றுள்ளார்.
தேசிய கல்வி நிறுவகத்தில் 1994 ஆம் ஆண்டு பட்டப்பின் டிப்ளோமாவும், யாழ் பல்கலைக்கழகத்தில் 2005 ஆம் ஆண்டு கல்வி முதுமாணிப் பட்டம் பெற்றதுடன் தேசிய கல்வி நிறுவகத்தில் பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆலோசனை வழிகாட்டல் ஆகிய பட்டங்களைப் பெற்றதுடன் தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளமோ பாட நெறிக்கான கல்முனை பிராந்தியத்திற்கான போதனாசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். 2009 நடைபெற்ற அதிபர் சேவை போட்டிப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற பெருமையும் இவருக்கு உண்டு. அதேவேளை அகில இலங்கை சமாதான நீதிவான், கல்முனை மத்தியஸ்தர் சபை உறுப்பினர், கல்முனை சமாதானமும் சமூக நல்லிணக்க அமையத்தின் உறுப்பினர், கல்முனை கனேடிய நட்புறவுச் கழகத்தின் செயலாளர், கல்முனை தொகுதி இந்து மாமன்ற உறுப்பினர் ஆகிய சமூகப் பணிகளும், நாவிதன்வெளி முத்துமாரியம்மன் ஆலய செயலாளராகவும் இன்னும் பல ஆலயங்களில் முக்கிய உறுப்பினராகவும் சேவையாற்றியதுடன் தற்போது பல ஆலயங்களின், பொது அமைப்புக்களின் போசகராகவும் செயற்பட்டு வருவதுடன் பல மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கும், உயர்கல்வி பெறவும், புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெறவும் முன்னின்று உழைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்