யாழ். மண்ணை அடைந்தது பேரெழுச்சிப் பேரணி!

தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சிப் போராட்டம் யாழ்ப்பாணம் மண்ணில் கால்பதித்தது.

கிளிநொச்சியில் இருந்து இன்று காலை ஆரம்பமாகிய இறுதிநாள் பேரணியில், பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ள நிலையில் முகமாலையில் பெரும் வரவேற்புடன் பெருந்திரளானோர் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.

வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி கடந்த மூன்றாம் திகதி அம்பாறை பொத்துவிலில் ஆரம்பமாகி மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று நேற்று மாலை கிளிநொச்சியைச் சென்றடைந்தது.

இதையடுத்து கிளிநொச்சியில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட பேரணி பரந்தன், பளை ஊடாக முகமாலையைக் கடந்துள்ளதுடன் கொடிகாமம், சாவகச்சேரிக்குச் சென்று யாழ்ப்பாணம் மாநகரம், யாழ்ப்பாணம் பொதுநூலகம், யாழ்ப்பாணம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவிடம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், நல்லூர் தியாகதீபம் நினைவிடம் உட்பட பல பகுதிகளுக்கும் சென்று இறுதியில் பொலிகண்டியில் நிறைவடையவுள்ளது.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சர்வதேசம் நீதியை பெற்று தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும், தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்ந நீதிப் பேரணி முன்னெடுக்கப்படுகிறது.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும், இஸ்லாமிய மக்களின் மத நம்பிக்கையான ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் பல்வேறு வாழ்வுரிமைக் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.