சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ் அரசியல்வாதிகள் பொத்துவில்-பொலிகண்டி பேரணி-சரத் வீரசேகர

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ் அரசியல்வாதிகள் பொத்துவில்-பொலிகண்டி பேரணியில் ஈடுப்பட்டுள்ளார்கள் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

எனினும் இவ்வாறான செயற்பாடுகளினால் அரசாங்கத்தை பலவீனப்படுத்த முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் பேரணி பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆதரவுடன் பொலிகண்டி நோக்கிச் செல்கிறது.

இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர, “அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கு எதிராக சர்வதேச அரங்கில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு கடந்த அரசாங்கம் இணையனுசரனை வழங்கியமை அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணியாக அமைந்தது.

நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச அரங்கில் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் கொண்டு வரப்பட்டன. இதற்கு நல்லாட்சி அரசாங்கமும் ஆதரவு வழங்கியது. இதனால் அதுவரை காலமும் இலங்கைக்கு சார்பாக செயற்பட்ட நாடுகள் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதி காத்தது.

கடந்த காலங்களில் இலங்கைக்கு எதிராக செயற்பட்ட நாடுகள் தற்போது இலங்கைக்கு ஆதரவாக செயற்பட தீர்மானித்துள்ளன.

ஆகவே இம்முறை பலம் கொண்ட நாடுகள் இலங்கைக்கு சார்பாக இருக்கும். இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்கும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு உண்டு. ஆகவே மனித உரிமை பேரவை முன்வைக்கும் விடயங்களை சுயாதீனமான முறையில் ஆராயும் உரிமை இலங்கைக்கு உண்டு. இவ்விடயத்தில் எத்தரப்பினருக்கும் அடிபணிய வேண்டிய தேவை கிடையாது.

தமிழ் பேசும் மக்களுக்கு நீதி வழங்குவதாக கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தலைமைத்துவமாக கொண்ட தரப்பினர்கள் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி செல்கிறார்கள்.

வெறுக்கத்தக்க பேச்சுக்களினால் அரசாங்கத்தை ஒருபோதும் பலவீனப்படுத்த முடியாது. முன்னெடுக்கப்படும் போராட்டத்தால் எதுவும் மாறப்போவதில்லை.

நாட்டில் எவ்வின மக்களுக்கும் அநீதி இழைக்கப்படவில்லை. குற்றச் செயல்களுடன் தொடர்புப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் ஊடாகவே தண்டிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டுமே தவிர பேரணி சென்று தீர்வை பெற முடியாது என்பதை தமிழ் தரப்பினர் புரிந்துகொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.