ஆலோசனை ஆசிரியர் நியமனங்களை வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

(ஹஸ்பர் ஏ ஹலீம்)
ஆலோசனை ஆசிரியர் தேர்வில் தெரிவுசெய்யப்பட்ட தமக்கான நியமனங்களை வழங்குமாறு கோரி  நேற்று(08) பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வடமேல் மாகாண மாணவர் ஆலோசனை ஆசிரியர் தேர்வில் தேர்வு செய்யபட்ட தம்மை இழுத்தடிப்பு செய்யாமல் உடனடியாக நியமனம் வழங்குமாறு கோரி வடமேல் மாகாணசபை அலுவலகத்திற்கு முன்னால் இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2018 ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் திகதி தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்கள மற்றும் தமிழ் மொழிமூல பாடசாலை மாணவர் ஆலோசனை பணிகளுக்காக பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கல்வி அமைச்சினால் கோரப்பட்டன.  இவ்விண்ணப்பங்கள் மாகாண ரீதியாக வடமேல் மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாண பாடசாலைகளுக்காக கோரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 இதனடிப்படையில் 2018 நவம்பர் 25 ஆம் திகதி விண்ணப்பதாரர்களுக்கான எழுத்து மூலப் பரீட்சை கொழும்பில் நடைபெற்றது. இதில் தெரிவானோர்க்கான நேர்முகப்பரீட்சை 2019 மே 31 ஆம் திகதியில் இருந்து ஜூன் 10 ஆம் திகதி வரை பத்தரமுல்ல, இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் இடம்பெற்றது.
அதன்பின் குறித்த இரு தேர்விலும் தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரிகளுக்கான பிரயோக பரீட்சை கடந்த வருடம் ஜனவரி மாதம் 6 ஆம் திகதியிலிருந்து 14 ஆம் திகதி வரை கல்வி அமைச்சில் நடைபெற்றது.
இதன் இறுதி பெறுபேருகள் 2020 மார்ச் 12ஆம் திகதி அன்று பரீட்சை திணைக்களத்தின் இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டது. பின்னர் நீக்கப்பட்டு திருத்தங்களுடன் 2020 செப்டம்பர் 08ம் திகதி மீண்டும் பெறுபேறுகள் வெளியாகின.
இதன்படி தெரிவு செய்யப்பட்ட தேசிய பாடசாலைகளுக்கான மாணவ ஆலோசனை ஆசிரியர்களுக்கான நியமனங்கள் கடந்த ஜனவரி 4 ஆம் திகதி வழங்கப்பட்டது. எனினும் வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கான நியமனங்கள் இதுவரை வழங்கப்படவில்லை என்று தெரிவான மாணவ ஆலோசனை ஆசிரியர்கள் விசனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கல்வி அமைச்சில் தாம் தொடர்பு கொண்டு கேட்டபோது தெரிவுசெய்யப்பட்ட ஆசிரியர்களின் விபரங்கள் குறித்த மாகாணசபைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததாக குறிப்பிட்டனர்.
எனினும் இது தொடர்பாக வடமேல் மாகாண சபைக்கு தொடர்புகொண்டு கேட்டபோது இது தொடர்பான தெளிவான விபரங்கள் எமக்கு இதுவரை கல்வி அமைச்சினால் வழங்கப்படவில்லை. அதனால் இந்த நியமனத்தை வழங்குவதில் சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்தாக குறிப்பிட்டனர்.
ஏக காலத்தில் தம்மோடு தேர்வுகளில் பங்கு பற்றிய தேசிய பாடசாலைகளுக்காக தெரிவு செய்யப்பட்ட  ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்ட போதும் தமக்கான நியமனங்களை வழங்காது காலதாமதப் படுத்துவது தமக்கு வேதனை அளிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.