ஹரீஸ் எம்.பியின் அஜன்டாவில் இயங்கும் முதல்வரின் தன்னிச்சையான போக்குகள் நிறுத்தப்பட வேண்டும்-மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்

(பாறுக் ஷிஹான்)

கல்முனை மாநகர சபையினை உடனடியாக கலைக்க வேண்டும் என ஆளுநரிடம் வேண்டுகோள் விடுப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்துள்ளார்.

கல்முனை ஊடக மையத்தில் செவ்வாய்க்கிழமை(9) இரவு இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

கல்முனை மாநகர சபையின் 12 வட்டாரமான பெரிய பகுதியில் மின்குமிழை கொள்வனவு செய்தும் அதனை பொருத்த முடியாமல் இருப்பதாகவும் கல்முனை வாழ்  இளைஞர்கள் அதனை பொருத்துவதற்கு முன்வருமாறு எனது சக கந்தசாமி சிவலிங்கம் கேட்டுள்ளார்.இதற்கு காரணம் பாதீடு தொடர்பில் எம்மால் வாக்களிக்கப்பட்டமை ஆகும்.உண்மையில் இந்த பாதீட்டிற்கு எதிராக வாக்களித்தமைக்கு முக்கிய காரணம் முதல்வருடன் கொண்ட தனிப்பட்ட குரோதமோ  வெறுப்புக்களோ அல்ல. இந்த வாக்களிப்பின் போது எமது இளைஞர்கள் பொதுமக்கள் விடுத்த நியாயமான கோரிக்கைகளை ஏற்று தான் பாதீட்டிற்கு எதிராக எமது நியாயமான குறைபாடுகள்  வேண்டுகோள்களை கூறி வாக்களித்தோம். தற்போது இவ் விடயங்களை முதல்வர் வைத்துக்கொண்டு எமது பகுதிகளில் இடம்பெறும் திண்மக்கழிவுகள் தொடர்பான பிரச்சினை மற்றும் மின்விளக்குகள் ஒளிராமை தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு எவ்வித பதிலும் கிடைப்பதில்லை.சபையில் குறைகளை சுட்டிகாட்டி கதைக்கின்ற போது பிழையானவர்களாக  எம்மை அடையாளப்படுத்துகின்றனர்.இவ்வாறாக மாநகர சபை இயங்குவதனால் எந்தவித பிரயோசனமும் இல்லை.எனவே இந்த மாநகர சபையை கலைக்குமாறு ஆளுநர் ஜனாதிபதியை கேட்டுக்கொள்கின்றோம்.இவ்வாறு இப்பாரபட்சம் தொடருமாயின் இனரீதியான பிரச்சினை தொடர வாய்ப்பாகும்.அத்துடன் ஹரீஸ் எம்.பியின் அஜன்டாவில் இயங்கும்  முதல்வரின் தன்னிச்சையான போக்குகள் நிறுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.