வீடுடைத்து களவாடிய சந்தேக நபர்கள் மூவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்
(பாறுக் ஷிஹான் )
வீடொன்றினை உடைத்து களவாடிய சந்தேக நபர்கள் மூவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டப்பளம் பிரதேசத்தில் கடந்த 2020.11.03ம் திகதி நள்ளிரவில் வீடொன்று உடைக்கப்பட்டு ஒன்றரை இலட்சம் பெறுமதியான பணம் மற்றும் ஒரு இலட்சம் பெறுமதியான தங்க நகை, கையடக்கத் தொலைபேசிகள் என்பன களவாடப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப் பெற்றிருந்தது.
குறித்த முறைப்பாட்டிற்கமைய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்கவின் கட்டளையின்படி அம்பாறை கல்முனை பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.ஜயரட்ன ஆலோசனையில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்தின் வழிகாட்டலுடன் சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வுப்பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
தொடர்ந்து களவாடப்பட்ட தொலைபேசி தொடர்பில் அதன் அறிக்கையைப்பெற்று அதன் பிரகாரம் களவாடப்பட்ட தொலைபேசியைப் பயன்படுத்தி வந்த அட்டாளைச்சேனைப்பகுதியை சேர்ந்த26 வயதுடைய சந்தேக நபரொருவர் கடந்த 2021.02.11ம் திகதி அப்பகுதியில் சம்மாந்துறை பொலிஸாரினால் கைதானார்.
கைதான நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைக்கமைய குறித்த வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபரான 35 வயதுடைய சந்தேக நபர் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் கைதானதுடன், களவாடப்பட்ட தங்க நகைகளை விற்பனை செய்த 26 வயதுடைய சந்தேக நபரது மனைவியும் கைதாகியுள்ளார்.
இவ்வாறு கைதான சந்தேக நபர்களது வாக்குமூலத்திற்கமைய அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள நகைக்கடையொன்றில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டு சந்தேக நபர்கள் 2021.02.12ம் திகதி வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட போது, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம்.றிஸ்வி உத்தரவிட்டார்.
மேலும், இச்சம்பவத்தில் கைதான பிரதான சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 420 மில்லி கிராம் ஹெரொயின் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை