அரசியல் மிரட்டல்களுக்கு நான் பயந்தவன் அல்லன்! – அமைச்சர் விமல் வீரவன்ச
அரசியல் ரீதியான சவால்கள் மற்றும் மிரட்டல்களுக்கு நான் ஒருபோதும் பயந்தவன் இல்லை.”
– இவ்வாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தனக்கு எதிராக அரசுக்குள் எழும் எதிர்ப்புகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பதவிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நியமிக்க வேண்டும் என்று கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு விமல் வீரவன்ச தெரிவித்திருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்தக் கருத்து தொடர்பாக அவர் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்பதுடன், அரசில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் கோரிக்கைகளை விடுத்திருந்தனர்.
அத்துடன் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அவரைக் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ள விமல் வீரவன்ச,
“ஜனாதிபதியை அரசியல் ரீதியில் பலப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே நான் செயற்படுகின்றேன்.
தற்போது எனக்கு எதிராக அரசியல் ரீதியில் சவால்களும், மிரட்டல்களும் விடுக்கப்படுகின்றன. இது தொடர்பாக நான் பயமடையவில்லை.
நான் ஜே.வி.பியில் இருந்து வெளியேறும்போது இதனை விடவும் பெரிய சவால்களையே சந்தித்தேன். இதனால் தற்போதைய சவால்கள் ஒன்றும் எனக்குப் பெரிதல்ல” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை