யாழ்ப்பாணத்தின் தீவுகள் இந்தியாவுக்கா? சீனாவுக்கா? – இன்னமும் இறுதி முடிவு இல்லை என்கிறார் டலஸ்

யாழ்ப்பாணத் தீவுகளில் மின் உற்பத்தி அபிவிருத்திப் பணிகளை இந்தியாவுக்காக அல்லது சீனாவுக்காக வழங்குவது என்பது தொடர்பில் எந்தவொரு இறுதி முடிவும் அரசு எடுக்கவில்லை. இந்தியாவுக்கு வழங்கலாம் என்ற கருத்து எனது தனிப்பட்ட கருத்து.”

– இவ்வாறு மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளில் காற்றாலை மற்றும் சூரியஒளி மூலமான மின்சார உற்பத்தித் திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் சீனாவின் பங்களிப்புடன் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவையும் அனுமதி வழங்கியிருந்தது.

இந்தியாவுக்கு மிக நெருக்கமாகவுள்ள யாழ்ப்பாணத்தின் சப்த தீவுகளில் சீனா கால் பதிப்பதை இந்தியா விரும்பவில்லை. அதேபோன்று தமிழ்த் தேசியக் கட்சிகளும் விரும்பியிருக்கவில்லை. இராஜதந்திர மட்டங்களில் இந்த விடயம் தொடர்பில் எதிர்வினை இலங்கை அரசுக்குக் காட்டப்பட்டது.

அதன்பின்னர் இலங்கை அரசுக்கு இந்தத் திட்டத்துக்குரிய நிதியான 12 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கி, திட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்தியா விருப்பம் தெரிவித்திருந்தது.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுடன் இது தொடர்பில் பேச்சு நடத்தியிருந்தார். இந்த சந்திப்புத் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் டலஸ், இந்தியாவுக்கு இந்தத் திட்டம் வழங்கப்படும் என்றும் அதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

அவர் கூறியதற்கு அமைவாக இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவில்லை. இது தொடர்பில்  அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் கேள்வி எழுப்பியபோது, “இந்தியாவுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தமை என்னுடைய தனிப்பட்ட கருத்து. அது அரசின் நிலைப்பாடு அல்ல. இந்த அபிவிருத்திப் பணிகளை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் இன்னமும் நாம் தீர்மானிக்கவில்லை” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்